Loading...
பிரணவி அர்ஸின் மன உறுதி அசாத்தியமானது: இந்திய வீராங்கனையை வியந்து பாராட்டிய ரோரி மெக்இல்ராய்
கோல்ஃப் ஜாம்பவான் ரோரி மெக்இல்ராய் இந்திய வீராங்கனை பிரணவி அர்ஸை நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

பிரணவி அர்ஸின் மன உறுதி அசாத்தியமானது: இந்திய வீராங்கனையை வியந்து பாராட்டிய ரோரி மெக்இல்ராய்

எழுதியவர் Vasuki
Oct 14, 2026
04:19 pm

செய்தி முன்னோட்டம்

நான்கு முறை மேஜர் பட்டம் வென்ற சர்வதேச கோல்ஃப் உலகின் நட்சத்திர வீரரான ரோரி மெக்இல்ராய், இந்தியாவில் நடைபெறவுள்ள 'டிபி வேர்ல்ட் இந்தியா சாம்பியன்ஷிப்' தொடரில் பங்கேற்பதற்காக இரண்டாவது முறையாக இந்தியா வந்துள்ளார். இந்தப் போட்டியின் தொடக்கப் பயிற்சிகளுக்கு இடையே, அண்மையில் ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்த இந்தியாவின் இளம் கோல்ஃப் வீராங்கனை பிரணவி அர்ஸை நேரில் சந்தித்துப் பேசிய மெக்இல்ராய், அவரது அசாதாரண மன உறுதியையும் மீண்டெழும் குணத்தையும் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

பிரணவியின் மன உறுதியும்

ஆசிய விளையாட்டில் தங்கம்

ஆசிய விளையாட்டுப் போட்டியின் தொடக்கத்தில் 'டிரிபிள் போகி' (Triple Bogey) என்ற கடுமையான பின்னடைவைச் சந்தித்த போதிலும், அதிலிருந்து அசாத்தியமாக மீண்டுவந்து நாட்டுக்காகத் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார் பிரணவி.

இதனை நினைவு கூர்ந்த மெக்இல்ராய், "ஆரம்பத்திலேயே ஏற்பட்ட பின்னடைவுக்குப் பிறகும் மனம் தளராமல் பிரணவி காட்டிய மன உறுதி அளப்பரியது".

"அவரை நேரில் சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி. அடுத்த வாரம் நடைபெறவுள்ள மகளிர் இந்திய ஓபன் தொடருக்காக அவர் தீவிரமாகப் பயிற்சி எடுத்து வருகிறார். மிகச் சிறந்த ஆளுமையைக் கொண்டுள்ள அவருக்கு எனது வாழ்த்துகள்" எனக் கூறினார்.

வியூகம்

இந்திய மக்களின் விருந்தோம்பல்

இந்தியாவுக்கு மீண்டும் வருகை தந்தது குறித்துப் பேசிய மெக்இல்ராய், "நாங்கள் உலகெங்கும் பல நாடுகளுக்குப் பயணிக்கிறோம். ஆனால் இந்தியாவில் மக்கள் காட்டும் கனிவான விருந்தோம்பலும் அன்பும் உள்ளத்தைத் தொடுகிறது".

"இங்குள்ள மசாலா சுவைகளும் உணவும் எனக்கு மிகவும் பிடிக்கும். அதேசமயம் அதிக காரம் இல்லாமல் பார்த்துக் கொள்வேன்" என்றார்.

மேலும் இப்போட்டி நடைபெறவுள்ள மைதானம் குறித்துப் பேசுகையில், "இது நான் சிறுவயதில் விளையாடிய மரங்கள் நிறைந்த குறுகிய மைதானங்களை நினைவூட்டுகிறது.

"இங்கு கண்மூடித்தனமாக பலத்தை வெளிப்படுத்துவதை விட, நேர்த்தியாகப் பந்தை ஃபேர்வேயில் நிலைநிறுத்துவதே முக்கியம்".

'வெறும் ஷாட்களை அடித்து ரசிகர்களைக் கவர்வதற்காக நான் வரவில்லை. தொடரை வெல்வதே என் இலக்கு. அதற்கேற்ப பொறுமையுடனும் துல்லியத்துடனும் விளையாடுவேன்" என்று தனது வியூகத்தைத் தெளிவுபடுத்தினார்.

ADVERTISEMENT