2027 உலகக் கோப்பையில் ரோஹித் - கோலி ஆடுவார்களா? பிசிசிஐ தலைவர் முன்வைத்த நிபந்தனைகள்
செய்தி முன்னோட்டம்
சர்வதேச ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு 2027-ல் நடைபெறவுள்ள நிலையில், இந்திய அணியின் முன்னணி தூண்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரின் எதிர்காலம் குறித்து கிரிக்கெட் வட்டாரங்களில் பல்வேறு விவாதங்கள் எழுந்து வருகின்றன. 30 வயதைக் கடந்த மூத்த வீரர்கள் இருவரையும் அணியில் தேர்வு செய்வது குறித்து பிசிசிஐ தலைவர் மிதுன் மன்ஹாஸ் கருத்து தெரிவிக்கையில், வீரர்களின் தேர்வு என்பது முற்றிலும் பயிற்சியாளர்கள் மற்றும் தேர்வுக்குழுவினரின் முடிவு என்றாலும், அணியில் இடம்பிடிக்க வயது ஒருபோதும் தடையாக இருக்காது என்றும் உடற்தகுதியும் ஆட்டத்திறனும் மட்டுமே முக்கிய நிபந்தனைகளாக இருக்கும் என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.
வயது
உடற்தகுதியும் திறமையும்தான் முக்கியம்
ஸ்போர்ட்ஸ்டார் ஊடகத்திற்கு அளித்த நேர்காணலில் பேசிய மிதுன் மன்ஹாஸ், "ஒரு வீரர் உடற்தகுதியுடன் இருந்து, நாட்டிற்காகத் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வெற்றிகளைப் பெற்றுத் தருகிறார் என்றால், அதை மட்டுமே நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்".
"பிசிசிஐ நிர்வாகமாக நாங்கள் இந்தத் தேர்வில் நேரடியாகத் தலையிட முடியாது. அது தேர்வுக்குழு மற்றும் தலைமைப் பயிற்சியாளரைச் சார்ந்தது".
"ஆனால் எனது பார்வையில், அணித் தேர்வுக்கு உடற்தகுதியும் களத்தில் வெளிப்படுத்தும் ஆட்டத்திறனுமே பிரதான அளவுகோலாக இருக்க வேண்டும். நிச்சயமாக வீரரின் வயது ஒரு தடையாக அமையக்கூடாது" என்று அவர் ஆணித்தரமாகத் தெரிவித்துள்ளார்.
மூத்த வீரர்கள்
இளம் கேப்டன் கில்லுக்கு வழிகாட்டும் சீனியர்கள் கூட்டணி
2027 உலகக் கோப்பையை மனதில் கொண்டு இளம் வீரர் சுப்மன் கில் இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு வழிகாட்ட மூத்த வீரர்களின் இருப்பு மிகவும் அவசியம் எனக் குறிப்பிட்ட மன்ஹாஸ், "விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா போன்ற அனுபவமிக்க ஜாம்பவான்கள் அணியில் இருப்பது கில்லுக்குப் பெரும் பலமாக அமையும். அதேபோல் பந்துவீச்சை வழிநடத்த ஜஸ்பிரித் பும்ரா இருக்கிறார். இது பணிச்சுமையை சமமாக பகிர்ந்துகொள்ள உதவும்" என்றார்.
நெருக்கடியான தருணங்களில் நாட்டை மீட்டெடுத்த இந்த மூத்த வீரர்களின் அனுபவம், 2027 உலகக் கோப்பை வியூகத்தில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் எனக் கணிக்கப்படுகிறது.