காதலனை கரம்பிடிக்க பல்லாயிரக்கணக்கான கி.மீ., கடந்து பீகார் கிராமத்திற்கு வந்த ரஷ்ய பெண்
செய்தி முன்னோட்டம்
நாடு, இனம், மொழி, கலாசாரம் மற்றும் பொருளாதார நிலை என எந்தவொரு தடைகளையும் தகர்த்தெறிந்து, தான் நேசித்த காதலனை கரம்பிடிப்பதற்காக பல்லாயிரக்கணக்கான கிலோமீட்டர் தூரம் பயணித்து ரஷ்யாவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் பீகாரின் குக்கிராமத்திற்கு வந்துள்ள நெகிழ்ச்சியான சம்பவம் இணையத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. காதலனின் எளிய குடிசை வீட்டைப் பார்த்தும் முகம் சுளிக்காமல், ஆடம்பர வசதிகளை விட அவரோடு இணைந்திருப்பதே வாழ்வின் நோக்கம் எனக் கூறி அங்கேயே தங்கியுள்ள ரஷ்ய பெண்ணின் முடிவை கிராம மக்கள் வியப்புடன் பாராட்டி வருகின்றனர்.
பந்தம்
ரஷ்யாவில் மலர்ந்த காதல்
பீகார் மாநிலத்தை சேர்ந்த ராகுல் யாதவ் என்ற இளைஞர், வேலைவாய்ப்புக்காக ரஷ்யா சென்றிருந்தபோது அங்குள்ள ஜூலி என்ற பெண்ணுடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் நட்பாகத் தொடங்கிய இவர்களது பந்தம் நாளடைவில் ஆழமான காதலாக உருவெடுத்தது. இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு ராகுல் யாதவ் தனது சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளார்.
காதலனைப் பிரிந்திருக்க முடியாத ஜூலி, தனது குடும்பத்தினருடன் ரஷ்யாவில் இருந்து புறப்பட்டு இந்தியா வந்து, ராகுலின் கிராமத்து வீட்டிற்கு நேரடியாக வந்து இறங்கினார்.
நவம்பரில் திருமணம்
ஆடம்பரத்தை உதறிய ஜூலி
அங்கு ராகுலின் குடும்பம் எந்தவித ஆடம்பர வசதிகளும் இல்லாத மிகச் சாதாரண எளிமையான வீட்டில் வாழ்ந்து வருவதைக் கண்டதும், ஜூலியின் குடும்பத்தினருக்கு தொடக்கத்தில் லேசான ஆச்சரியம் ஏற்பட்டாலும், ஜூலி அதனை ஒரு பொருட்டாகவே கருதவில்லை.
தன் மனதைக் கவர்ந்த காதலனுடன் எளிய சூழலிலும் மகிழ்ச்சியாக வாழ்வதற்கே முன்னுரிமை அளித்து அங்கேயே தங்க முடிவு செய்தார்.
இருவரின் உண்மையான அன்பைக் கண்டு மனம் நெகிழ்ந்த இரு குடும்பத்தினரும் பேசி திருமணத்திற்கு முழு சம்மதம் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, வரும் நவம்பர் மாதத்தில் இவர்களது திருமணம் முறைப்படி நடைபெறவுள்ளது.