நாடாளுமன்ற அத்துமீறல்: நாட்டில் பதட்டத்தை உருவாக்க திட்டமிட்டிருந்த குற்றவாளிகள்
நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் சம்பவத்தை திட்டமிட்டு செயல்படுத்திய கூட்டத்தின் மூளையாக செயல்பட்ட லலித் ஜா என்பவர் ராஜஸ்தானுக்கு தப்பி சென்று கைது செய்யப்பட்டவர்களின் மொபைல் போன்களையும் ஆதாரங்களையும் அழித்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர். லலித் ஜா மற்றும் அவரது கூட்டாளிகள், நாட்டில் வன்முறை பதட்டத்தை உருவாக்கி தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசாங்கத்தை நிர்ப்பந்திக்க இருந்ததாகவும் டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். பலத்த பாதுகாப்புகளுக்கு மத்தியில் நாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினமான கடந்த டிசம்பர் 13ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடந்தது. அப்போது மக்களவை பூஜ்ஜியம் நேரத்தின் போது பார்வையாளர்கள் அரங்கில் இருந்து மக்களவைக்குள் அத்துமீறி நுழைந்த இருவர், புகை குண்டுகளை வீசினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
லலித் ஜாவுக்கு ஏழு நாள் போலீஸ் காவல்
நாடாளுமன்றத்திற்குள் புகை குண்டுகளை வீசியதற்காக இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சாகர் சர்மா மற்றும் மனோரஞ்சன் டி ஆகியோர் மக்களவை அறைக்குள் இருந்து கைது செய்யப்பட்ட நிலையில், நீலம் தேவி மற்றும் அமோல் ஷிண்டே ஆகியோர் நாடாளுமன்ற கட்டிடத்திற்கு வெளியே புகை குண்டுகளை வீசிய போது கைது செய்யப்பட்டனர். அது தவிர, இந்த அத்துமீறலுக்கு மூளையாக செயல்பட்ட லலித் ஜா என்பவர் ராஜஸ்தானுக்கு தப்பி சென்று ஆதாரங்களை அழித்தபின் நேற்று டெல்லி போலீஸில் சரணடைந்தார். நேற்று முக்கிய குற்றவாளியான லலித் ஜாவுக்கு ஏழு நாள் போலீஸ் காவல் விதிக்கப்பட்டது. இந்த கூட்டத்திற்கும் பயங்கரவாதிகளுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா என்பதை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.