Page Loader
பயங்கரவாத தாக்குதலில் மயிரிழையில் உயிர் தப்பிய சென்னை பயணிகள் நடந்ததை விவரிக்கின்றனர்
நேற்றைய தாக்குதலில் 26 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்

பயங்கரவாத தாக்குதலில் மயிரிழையில் உயிர் தப்பிய சென்னை பயணிகள் நடந்ததை விவரிக்கின்றனர்

எழுதியவர் Venkatalakshmi V
Apr 23, 2025
04:39 pm

செய்தி முன்னோட்டம்

நேற்று பிற்பகல் தெற்கு காஷ்மீர் சுற்றுலாப் பகுதிகளில் 26 பேரை சுட்டுக் கொன்றதால், துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் பள்ளத்தாக்கின் அமைதியைக் குலைத்தபோது, சென்னையை சேர்ந்த ஜெயஸ்ரீ தனது மகனுடன் பைசரன் புல்வெளியில், சம்பவ இடத்திலிருந்து ஐந்து நிமிட தூரத்தில் தான் இருந்துள்ளார். நேற்றைய தாக்குதலில் நூலிழையில் உயிர் தப்பியதை பற்றி அவர் தற்போது ஹிந்துஸ்தான் டைம்ஸ்-இடம் விவரித்துள்ளார்.

விவரம்

துப்பாக்கி சத்தம், சிதறி ஓடிய சுற்றுலாவாசிகள்

ஏப்ரல் 19 அன்று சென்னையில் இருந்து ஸ்ரீநகரில் தரையிறங்கினர் ஜெயஸ்ரீ குடும்பத்தார். அங்கிருந்து பயணப்பட்டு பஹல்காம் சுற்றி பார்க்க சென்றிருந்தனர். குதிரை மூலமாக பைசரன் புல்வெளியை "ஐந்து நிமிடங்களில்" அடையவிருந்தனர். "நாங்கள் பஹல்காமிலிருந்து மதியம் 12.45 மணியளவில் குதிரை சவாரி செய்தோம். எங்கள் குதிரை சவாரி வீரர், ஐந்து நிமிடங்களில், சுவிட்சர்லாந்தை ஒத்த இந்தியாவின் மிக அழகான இடத்தைப் பார்க்கப் போகிறோம் என்று எங்களிடம் கூறினார்". "அப்போது, ​​சிலர் தங்கள் குதிரைகளுடன், 'திரும்பிப் போ, திரும்பிப் போ, தீவிரவாதிகள் தாக்குதல்' என்று கூறி ஓடிக்கொண்டிருந்தனர். ஐந்து துப்பாக்கிச் சூடு சத்தங்களைக் கேட்டோம்" துப்பாக்கி சத்தம் கேட்டதும், அவர்களுடைய குதிரை வீரர், அவர்களுடன் அந்த இடத்திலிருந்து வேகமாக கீழே அழைத்து வந்ததாக ஜெயஸ்ரீ கூறினார்.

உயிரிழப்பு

தமிழத்திலிருந்து உயிரிழப்புகள் இல்லை ஆனால் மூவர் பலத்த காயம்

தமிழ்நாட்டிலிருந்து எந்த உயிரிழப்பும் இல்லை என்றாலும், மூவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் அங்கே சிக்கியுள்ள தமிழ்நாட்டை சேர்ந்த பயணிகளுக்கு உதவ ஐஏஎஸ் அதிகாரி தலைமையிலான குழு ஜம்மு காஷ்மீருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். பயங்கரவாதத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட தமிழக மக்கள் 011-24193300 மற்றும் 9289516712 என்ற உதவி எண்கள் மூலம் மாநில அரசைத் தொடர்பு கொள்ளலாம். டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திலும் ஒரு உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது