
‛ஆபரேஷன் சிந்தூர்'-ல் முன்னின்று நடத்திய சிங்கப் பெண்கள் இவர்கள்தான்! ராணுவ, விமானப்படையில் பெண் வீராங்கனைகளின் அதிரடி பங்கேற்பு
செய்தி முன்னோட்டம்
இன்று அதிகாலை பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா நடத்திய ‛ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதலில், இந்திய ராணுவமும், விமானப்படையும் துல்லியமாக ஈடுபட்டன.
இந்த நடவடிக்கையில் நமது நாட்டு பெண் வீராங்கனைகளும் பங்கேற்றுள்ள தகவல் பெருமையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தகவலை உறுதிப்படுத்தும் வகையில், பாதுகாப்பு அமைச்சகம் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் இரண்டு பெண் அதிகாரிகள் — ராணுவ கர்னல் சோபியா குரேஷி மற்றும் விமானப்படை விங் கமாண்டர் வியோமிகா சிங்— முக்கிய பங்கு வகித்தனர். தாக்குதல் பற்றி அவர்களே முன்னின்று விளக்கமளித்தனர்.
இந்த பெண் சிங்கங்களை பற்றி நீங்கள் அறிந்துகொள்ள வேண்டியவை:
ஏன்
Nari Shakti: பெண் அதிகாரிகள் ஏன் முன்னணியில் நிறுத்தப்பட்டனர்?
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில், 26 பொதுமக்கள், பெரும்பாலும் இந்து ஆண்கள் கொல்லப்பட்டனர். இதனால், பல இந்து பெண்கள் தங்கள் கணவர்களை இழந்தனர்.
இந்து மதத்தில் பெண்கள் திலகம் (சிந்தூர்) அணிவது மரபு என்பதால், அந்த பெண்கள் தங்கள் "சிந்தூரை" இழந்ததனர் என்பதன் நினைவாகவே, இந்த ராணுவ நடவடிக்கைக்கு "ஆபரேஷன் சிந்தூர்" என பெயரிடப்பட்டுள்ளது.
இதனை வலியுறுத்தும் விதமாகவே, இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பெண்கள் முன்னணியில் நிறுத்தப்பட்டனர்.
இது முக்கியமான தருணமாக பார்க்கப்படுகிறது.
'நாரி ஷக்தி' என மத்திய அரசு குறிப்பிடும் வகையில் இது இந்திய பெண்களின் வீரத்தையும், பயங்கரவாதத்துக்கு இந்தியாவின் தீர்மானத்தையும் பிரதிபலிக்கிறது.
இந்திய ராணுவம்
கர்னல் சோபியா குரேஷி - அனுபவம் நிரம்பிய ராணுவ வீராங்கனை
இந்திய ராணுவத்தின் சிக்னல்ஸ் படைப்பிரிவைச் சேர்ந்த கர்னல் சோபியா குரேஷி, வலுவான இராணுவ பின்னணியைக் கொண்டவர்.
2016ஆம் ஆண்டு பன்னாட்டு இராணுவப் பயிற்சியில் இந்திய ராணுவப் படைக்கு தலைமை தாங்கிய முதல் பெண் அதிகாரியாக வரலாறு படைத்தார்.
அந்த நேரத்தில் இந்தியா நடத்திய மிகப்பெரிய வெளிநாட்டு இராணுவப் பயிற்சியில் இந்தியாவின் அணியை அவர் வழிநடத்தினார்.
பங்கேற்ற 18 நாடுகளில், அவர் மட்டுமே பெண் தளபதி.
கர்னல் குரேஷி குஜராத்தைச் சேர்ந்தவர். அவரது தாத்தா இந்திய ராணுவத்தில் பணியாற்றினார். அவர் இயந்திரமயமாக்கப்பட்ட காலாட்படையில் ஒரு அதிகாரியை மணந்தார்.
குரேஷி 2006 ஆம் ஆண்டு காங்கோவில் ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் பணியிலும் பணியாற்றியுள்ளார் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிக்கை தெரிவிக்கிறது.
இந்திய விமானப்படை
வியோமிகா சிங் - வானத்தில் மின்னும் வீராங்கனை
பெயரைப்போலவே சிறு வயது முதல் பறக்க ஆசைப்பட்ட வியோமிகா, டிசம்பர் 18, 2019 அன்று, ஹெலிகாப்டர் விமானியாக IAF இன் பறக்கும் பிரிவில் சேர்ந்தார்.
2,500 க்கும் மேற்பட்ட மணிநேர பறக்கும் அனுபவத்துடன், வியோமிகா, ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள உயரமான பகுதிகளிலிருந்து வடகிழக்கில் உள்ள தொலைதூரப் பகுதிகள் வரை இந்தியாவின் மிகவும் சவாலான நிலப்பரப்புகளில் சேடக் மற்றும் சீட்டா போன்ற ஹெலிகாப்டர்களை இயக்கியுள்ளார்.
2020 ஆம் ஆண்டில், அருணாச்சலப் பிரதேசத்தில் ஒரு முக்கிய மீட்பு நடவடிக்கைக்கு அவர் தலைமை தாங்கினார், பொதுமக்களை வெளியேற்றுவதற்காக தீவிர சூழ்நிலைகளில் பறந்தார்.
2021 ஆம் ஆண்டில் மணிராங் மலைக்கு(21,650 அடி) அனைத்து பெண் முப்படைகளின் மலையேற்றப் பயணத்தில் அவர் சேர்ந்தபோது அவரது திறமை மீண்டும் நிரூபிக்கப்பட்டது.