Loading...
தலைமைத் தேர்தல் ஆணையர் மீது பதவி நீக்கத் தீர்மானம்? சபாநாயகர் ஓம் பிர்லா விளக்கம்
எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நோட்டீஸ்கள் தற்போது மாநிலங்களவையின் பரிசீலனையில் நிலுவையில் உள்ளன

தலைமைத் தேர்தல் ஆணையர் மீது பதவி நீக்கத் தீர்மானம்? சபாநாயகர் ஓம் பிர்லா விளக்கம்

எழுதியவர் Venkatalakshmi V
Oct 23, 2026
09:57 am

செய்தி முன்னோட்டம்

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவரத் திட்டமிட்டுள்ள புதிய பதவி நீக்கத் தீர்மானம் குறித்து, நாடாளுமன்ற விதிகள் மற்றும் நடைமுறைகளின்படியே உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் ஓம் பிர்லா தெளிவுபடுத்தியுள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சபாநாயகர் ஓம் பிர்லா, "தலைமைத் தேர்தல் ஆணையரை அகற்றுவது தொடர்பாக மீண்டும் புதிய நோட்டீஸ் ஏதேனும் பெறப்பட்டால், அது நாடாளுமன்ற விதிமுறைகள் மற்றும் நடைமுறைகளுக்கு உட்பட்டு தீவிரமாக பரிசீலிக்கப்படும்" எனத் தெரிவித்தார். முன்னதாக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த இரு முயற்சிகளில், முதல் நோட்டீஸ் இரு அவைகளினாலும் நிராகரிக்கப்பட்ட நிலையில், இரண்டாவது முயற்சியின் நோட்டீஸ்கள் தற்போது மாநிலங்களவையின் பரிசீலனையில் நிலுவையில் உள்ளன.

செயல்முறை

தலைமைத் தேர்தல் ஆணையரை பதவி நீக்கம் செய்வது எப்படி?

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி, தலைமைத் தேர்தல் ஆணையரை தன்னிச்சையாக பதவியிலிருந்து நீக்க முடியாது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ், உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவரை பதவியிலிருந்து நீக்குவதற்குப் பின்பற்றப்படும் அதே கடினமான இம்பீச்மென்ட் நடைமுறையே தலைமைத் தேர்தல் ஆணையருக்கும் பொருந்தும்.

குற்றம் நிரூபிக்கப்பட்டாலோ அல்லது செயல்பட முடியாத நிலை ஏற்பட்டாலோ, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் (மக்களவை மற்றும் மாநிலங்களவை) மொத்த உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவுடனும், வாக்களிக்கும் உறுப்பினர்களில் 3-ல் 2 பங்கு ஆதரவுடனும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட வேண்டும்.

பின்னணி

எதிர்க்கட்சிகளின் தொடர் போராட்டம்

SIR தொடர்பான முடிவுகள் மற்றும் உத்தரவுகள் தங்களுக்குத் தெரியாமலேயே பிறப்பிக்கப்பட்டதாகக் கூறி, கடந்த 10 மாதங்களில் குறைந்தது 14 முறை தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சாந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் தங்களது எதிர்ப்பைப் பதிவிட்டுள்ளனர் என்ற செய்தி வெளியானதைத் தொடர்ந்து, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் போராட்டம் நாடு முழுவதும் தீவிரமடைந்துள்ளது.

இதற்கிடையே, தேர்தல் ஆணையருக்கு எதிரான இளைஞர்களின் போராட்டங்கள் குறித்து நாடாளுமன்ற விவாதங்களில் எழுப்ப நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முழு உரிமை உண்டு என்றும், ஆனால் ஜனநாயகத்தில் கோஷமிடுதலுக்கும் பதாகைகளுக்கும் அவைக்குள் இடமில்லை என்றும் ஓம் பிர்லா குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT