இந்தியாவில் 90% பொறியாளர்களுக்கு FDE பயிற்சி வழிகள் தெரியவில்லை; ஸ்கேலர் அறிக்கையில் வெளியான அதிர்ச்சித் தகவல்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் உள்ள மென்பொருள் பொறியாளர்களில் 58 சதவீதம் பேர் ஃபார்வர்டு-டிப்ளாய்டு இன்ஜினியர் (FDE) எனப்படும் வாடிக்கையாளர் மைய ஏஐ தொழில்நுட்பப் பணிகளுக்கு மாற விருப்பம் தெரிவித்துள்ளனர். கல்வித் தொழில்நுட்ப நிறுவனமான ஸ்கேலர் மற்றும் சைபர் மீடியா ரிசர்ச் இணைந்து நடத்திய ஆய்வில் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன. தொழில்நுட்பத் துறையில் புதிய ஏஐ மாற்றங்கள் உருவாகி வரும் சூழலில், இந்த புதிய பணி வாய்ப்பு பொறியாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. ஆனாலும், ஆய்வில் வெளியாகியுள்ள தகவல்கள் தொழில்துறையை அதிர வைத்துள்ளன. கூடுதல் விபரங்கள் இங்கே:-
சவால்கள்
முறையான பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டில் உள்ள சவால்கள்
FDE பணிக்கு மாற விருப்பம் இருந்தபோதிலும், 90 சதவீத பொறியாளர்களுக்கு இதற்கான தெளிவான திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழிகள் குறித்து விழிப்புணர்வு இல்லை.
மேலும், 52 சதவீதத்திற்கும் அதிகமான பொறியாளர்கள் இந்த வேலைக்கான தெளிவான வரைமுறை மற்றும் பயிற்சிப் பாதை இல்லாததால் எவ்வாறு FDE ஆவது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர்.
தற்போது இந்திய தொழில்நுட்பத் துறையில் வெறும் 1 சதவீத பொறியாளர்கள் மட்டுமே அதிகாரப்பூர்வ FDE பதவிகளில் வகித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தொலைநோக்குத் தேவை
இந்திய நிறுவனங்களின் தொலைநோக்குத் தேவையும் எதிர்கால திட்டமும்
இந்தியாவில் உள்ள 88 சதவீத நிறுவனங்கள் வரும் 2030 ஆம் ஆண்டிற்குள் FDE பணியாளர்களுக்கான தேவை கணிசமாக உயரும் என மதிப்பிட்டுள்ளன.
மேலும், 80 சதவீத பன்னாட்டு நிறுவனங்கள் அடுத்த 12 மாதங்களுக்குள்ளாகவே FDE பணியாளர்களை வேலைக்கு அமர்த்த திட்டமிட்டு வருகின்றன.
ஏஐ தொழில்நுட்பத்தை சாதாரண வணிகப் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்குத் தொழில்முறை பொறியாளர்கள் மிக அவசியமாகத் தேவைப்படுவதால், நிறுவனங்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளன.
புதிய வாய்ப்புகள்
இந்திய தொழில்முறை சந்தைக்கான புதிய வாய்ப்புகள்
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தை உண்மையான வணிகத் தீர்வுகளாக மாற்றுவதில் FDE பணியாளர்கள் முக்கியப் பங்காற்றுவார்கள் என ஸ்கேலர் தலைமை நிர்வாகி அமர் ஸ்ரீவாஸ்தவா தெரிவித்துள்ளார்.
ஏஐ தொழில்நுட்பம் வேலைகளைப் பறிப்பதாகப் பேசப்பட்டு வரும் நிலையில், FDE போன்ற புதிய வேலைவாய்ப்புகள் உருவாகி வருவதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
நடைமுறை ஏஐ பயன்பாடு மற்றும் வாடிக்கையாளர் சிக்கல்களுக்குத் தீர்வு காணும் வகையில் இந்திய பொறியாளர்களுக்கு சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்பட வேண்டியது அவசியமாகும்.