சென்னை ஓபன் 250 டென்னிஸ் 2026: வைஷ்ணவி, சகஜா, மாயாவிற்கு வைல்டு கார்டு வாய்ப்பு
செய்தி முன்னோட்டம்
சென்னையில் நடைபெறவுள்ள சர்வதேச டபிள்யூடிஏ 250 சென்னை ஓபன் டென்னிஸ் தொடருக்கான முதன்மை சுற்று வைல்டு கார்டு வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் முன்னணி வீராங்கனைகளான வைஷ்ணவி அட்கர் மற்றும் சகஜா யமலாபல்லி ஆகியோருக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. மேலும் இந்தியாவின் முதன்மை ஜூனியர் வீராங்கனை மாயா ராஜேஸ்வரன் ரேவதி மற்றும் அமெரிக்காவின் கேத்தரின் ஹுய் ஆகியோரும் வைல்டு கார்டு பெற்றுள்ளனர். இந்த சர்வதேச தொடர் நுங்கம்பாக்கம் எஸ்டிஏடி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
சாதனைகள்
இந்திய வீராங்கனைகளின் சமீபத்திய சாதனைகள்
17 வயதான மாயா ராஜேஸ்வரன் சமீபத்தில் போர்ச்சுகலில் நடைபெற்ற டபிள்யூ35 ஐடிஎஃப் தொடரில் தனது முதல் மூத்தோர் பிரிவின் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பட்டங்களை வென்றார்.
21 வயதான வைஷ்ணவி அட்கர் இந்த சீசனில் குவாலியரில் தனது இரண்டாவது பட்டத்தைக் கைப்பற்றினார்.
மேலும் பெங்களூரு மற்றும் மொனாஸ்டிர் தொடர்களில் இரண்டாமிடம் பிடித்தார்.
25 வயதான சகஜா தனது வாழ்க்கையில் இதுவரை நான்கு ஐடிஎஃப் பட்டங்களை வென்று அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க வீராங்கனை
அமெரிக்க வீராங்கனை மற்றும் கடந்த ஆண்டு செயல்பாடு
அமெரிக்காவை சேர்ந்த 21 வயதான கேத்தரின் ஹுய் 2023-ஆம் ஆண்டின் ஜூனியர் யுஎஸ் ஓபன் சாம்பியன் பட்டம் வென்றவராவார்.
தற்போது உலகத் தரவரிசையில் 1115-வது இடத்தில் உள்ள இவருக்கும் இந்தத் தொடரில் வைல்டு கார்டு வழங்கப்பட்டுள்ளது.
இந்திய வீராங்கனைகளான வைஷ்ணவி, சகஜா மற்றும் மாயா ஆகியோர் கடந்த ஆண்டு நடைபெற்ற சென்னை ஓபன் தொடரிலும் பங்கேற்றிருந்தனர்.
அதில் சகஜா மட்டுமே இரண்டாவது சுற்று வரை முன்னேறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்க தகவலாகும்.
வாழ்த்து
தமிழ்நாடு டென்னிஸ் சங்கத் தலைவர் விஜய் அம்ரித்ராஜ் வாழ்த்து
சென்னை ஓபன் டென்னிஸ் தொடர் குறித்துத் தமிழ்நாடு டென்னிஸ் சங்கத் தலைவர் விஜய் அம்ரித்ராஜ் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இந்திய வீராங்கனைகளுக்குச் சொந்த மண்ணில் விளையாடும் இந்த வாய்ப்பு மிகப் பெரிய பலமாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
வைஷ்ணவி, சகஜா மற்றும் மாயா ஆகியோர் இந்த சாதகமான சூழலை பயன்படுத்தி புகழ்பெற்ற டபிள்யூடிஏ தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.