இந்தியாவில் புதிய வாகன பாதுகாப்பு விதிகள்: 2030 முதல் கார்களில் ஆட்டோமேட்டிக் பிரேக்கிங் கட்டாயம்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் சாலை விபத்துகளைக் கட்டுப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக புதிய வாகனப் பாதுகாப்பு விதிகள் முன்மொழியப்பட்டுள்ளன. தானியங்கி அவசர கால பிரேக்கிங் சிஸ்டம் (AEBS) மற்றும் ஓட்டுநர் உதவி அமைப்புகள் (ADAS) இதில் முக்கிய இடம் பெறுகின்றன. மேலும், புதிய கிராஷ் டெஸ்ட் சோதனைகளும் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இந்த மாற்றங்கள் அனைத்தும் அடுத்தடுத்த ஆண்டுகளில் கட்டாயமாக்கப்படவுள்ளன. பயணிகள் மற்றும் பாதசாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தானியங்கி பிரேக்கிங் சிஸ்டம்
கார்களில் தானியங்கி பிரேக்கிங் சிஸ்டம் எப்போது கட்டாயம்?
பயணிகள் பயன்படுத்தும் கார்களில் தானியங்கி பிரேக்கிங் சிஸ்டம் கட்டாயமாக்கப்படுகிறது.
அக்டோபர் 2030 முதல் விற்பனைக்கு வரும் புதிய கார் மாடல்களில் இது இடம்பெற வேண்டும். பழைய கார் மாடல்களுக்கு அக்டோபர் 2032 முதல் இந்த விதிமுறை பொருந்தும்.
இந்தத் தொழில்நுட்பம் விபத்து நடக்கும் முன் ஓட்டுநரை எச்சரிக்கும். தேவைப்பட்டால் வாகனத்தைத் தானே நிறுத்தி விபத்தின் தீவிரத்தைக் குறைக்கும்.
இதன் மூலம் பல உயிர்களைக் காப்பாற்ற முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய விதிகள்
பேருந்துகள் மற்றும் லாரிகளுக்கு 2027 முதல் புதிய விதிகள்
கனரக வணிக வாகனங்களான பேருந்துகள் மற்றும் லாரிகளுக்கு அக்டோபர் 2027 முதல் புதிய பாதுகாப்பு கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன.
அவசர கால பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் லேன் விலகல் எச்சரிக்கை சாதனம் ஆகியவை இதில் அடங்கும்.
மேலும் ஓட்டுநர் சோர்வைக் கண்டறியும் சென்சார்களும் கட்டாயமாக்கப்படுகின்றன.
நீண்ட தூரம் பயணிக்கும் லாரி மற்றும் பேருந்து ஓட்டுநர்களின் கவனச்சிதறலால் ஏற்படும் பெரிய விபத்துகளைத் தடுக்க இந்த புதிய கட்டுப்பாடுகள் பெரிதும் உதவும்.
பாதுகாப்பு
புதிய கிராஷ் டெஸ்ட் சோதனைகள் மற்றும் பாதசாரிகள் பாதுகாப்பு
வாகனங்களின் முன்புற மற்றும் பக்கவாட்டு மோதல் பாதுகாப்பிற்கான புதிய கிராஷ் டெஸ்ட் சோதனைகள் அக்டோபர் 2027 முதல் அறிமுகமாகின்றன.
பாதசாரிகள் பாதுகாப்பிற்கான புதிய விதிமுறைகள் அக்டோபர் 2028 முதல் அமலுக்கு வரவுள்ளன.
விபத்தின் போது கால்களில் ஏற்படும் காயங்களைக் கணிக்கும் சிறப்பு சோதனைகள் 2032 முதல் நடைமுறைப்படுத்தப்படும்.
மின்சார வாகனங்களின் பேட்டரி பாதுகாப்பு மற்றும் பின்புற மோதல்களுக்கான புதிய விதிகள் ஏப்ரல் 2029 முதல் அமல்படுத்தப்பட உள்ளன.