அக்டோபர் தொடர் விடுமுறை: 3,500-க்கும் மேற்பட்ட சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
செய்தி முன்னோட்டம்
அக்டோபர் மாதத் தொடக்கத்தில் காந்தி ஜெயந்தி மற்றும் வார இறுதி நாட்களை ஒட்டி தொடர் விடுமுறை வருவதால், பயணிகளின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் மாநிலம் முழுவதும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. அக்டோபர் 1 (வியாழக்கிழமை), அக்டோபர் 2 (காந்தி ஜெயந்தி), அக்டோபர் 3 (சனிக்கிழமை) மற்றும் அக்டோபர் 4 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 4 நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக அதிகளவிலான பயணிகள் சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்புப் பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது.
பேருந்துகள்
கிளாம்பாக்கம் மற்றும் கோயம்பேட்டிலிருந்து பேருந்துகள்
சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருச்சி, மதுரை, திருநெல்வேலி, கோயம்புத்தூர் உள்ளிட்ட இடங்களுக்கு அக்டோபர் 1 அன்று 1,580 பேருந்துகளும், அக்டோபர் 2 அன்று 745 பேருந்துகளும், அக்டோபர் 3 அன்று 895 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
கோயம்பேட்டிலிருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு போன்ற இடங்களுக்கு வியாழக்கிழமை 220 பேருந்துகளும், அடுத்தடுத்த நாட்களில் தலா 115 பேருந்துகளும் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
மாதவரத்திலிருந்து திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, வேலூர் போன்ற இடங்களுக்கும், பெங்களூரு, கோயம்புத்தூர், திருப்பூரிலிருந்தும் பிற மாவட்டங்களுக்குச் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
விடுமுறை முடிந்து பயணிகள் மீண்டும் சென்னை மற்றும் பெங்களூரு திரும்பும் வசதியாக, அக்டோபர் 4 (ஞாயிற்றுக்கிழமை) அன்று மட்டும் பல்வேறு ஊர்களிலிருந்து 1,471 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
முன்பதிவு
முன்பதிவு மற்றும் வேண்டுகோள்
தற்போது வரை வியாழக்கிழமை முதல் ஞாயிறு வரையிலான பயணங்களுக்கு 64,000-க்கும் மேற்பட்ட பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர்.
கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, பயணிகள் www.tnstc.in என்ற இணையதளம் அல்லது TNSTC செயலி (Mobile App) மூலமாக முன்கூட்டியே பயணச் சீட்டுகளை முன்பதிவு செய்து பயணிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.