அடுத்த இரண்டு நாட்களுக்கு வெளுக்கப் போகுது வெயில்; சென்னை வானிலை ஆய்வு மையம் அலெர்ட்
தமிழகத்தில் அடுத்த இரண்டு தினங்களுக்கு வெப்பநிலை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர்) தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கு அடுத்த 7 நாட்களுக்கான வானிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை பின்வருமாறு:- மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 15.09.2024 முதல் 21.09.2024 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் அடுத்த 2 தினங்களுக்கு (15.09.2024 மற்றும் 16.09.2024) அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2°-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு
சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37°-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37°-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இதற்கிடையே, செப்டம்பர் 15 முதல் 19 வரை மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளில் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.