2023ம் ஆண்டில் தமிழ்நாட்டில் மலர்ந்த புதிய உதயங்கள் - ஓர் செய்தி குறிப்பு !
திருநெல்வேலி-சென்னை வந்தே பாரத் ரயில் சேவை துவக்கம் இந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயில் சேவையானது கடந்த 2019ம்.,ஆண்டு டெல்லி-வாரணாசி இடையே துவக்கி வைக்கப்பட்டது. இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெறப்பட்டதால், நாடு முழுவதும் இந்த ரயில் சேவையினை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்து அதற்கான நடவடிக்கைகளை எடுத்தது. இந்நிலையில், கடந்த செப்டம்பர்-24ம்.,தேதி.,2023ல் பிரதமர் மோடி 9 வந்தே பாரத் ரயில் சேவைகளை துவக்கி வைத்தார். அதில் ஒன்றுதான் நெல்லை-சென்னை வந்தே பாரத் ரயில். இதற்கான துவக்கவிழா திருநெல்வேலி ஜங்க்ஷனில் நடந்தது. முதல்நாள் சேவையில் பயணிகளோடு தெலுங்கானா ஆளுநர்.தமிழிசை சௌந்தரராஜன், மத்திய அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் பயணித்தனர். தினந்தோறும் இருமார்க்கமாகவும் இயக்கப்படும் இந்த ரயில் செவ்வாய்கிழமைகளில் மட்டும் பராமரிப்பு காரணமாக இயக்கப்படுவதில்லை.
நாகப்பட்டினம் டூ இலங்கை பயணிகள் கப்பல் சேவை துவக்கம்
தமிழ்நாடு நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு இயக்கப்படும் பயணிகள் கப்பல் சேவை கடந்த அக்டோபர்.14ம்.,தேதி மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவால், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் கொடியசைத்து துவக்கிவைத்தனர். இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் பங்கேற்றார். அப்போது அவர், 'இக்கப்பல் சேவை தொடங்கப்பட்டிருப்பது நமது உறவுகளை வலுப்படுத்துவதில் ஒரு முக்கிய மைல்கல்' ஆகும் என்று உரையாற்றினார். இதனையடுத்து, நாகை துறைமுகத்திலிருந்து காலை 7.30மணிக்கு புறப்படும் இந்த கப்பல் மதியம் 12மணிக்கு கங்கேசன்துறை துறைமுகத்தை அடையும். மீண்டும் அங்கு மதியம் 2மணிக்கு புறப்பட்டு மாலை 6மணிக்கு நாகை திரும்பும். ஒருவர் 50கிலோ வரையிலான பொருட்களை இலவசமாக எடுத்துச் செல்லலாம். இலங்கைக்கு படகில் செல்ல விசா மற்றும் பாஸ்போர்ட் கட்டாயம்.
மதுரையில் துவங்கப்பட்ட அதிநவீன கலைஞர் நூற்றாண்டு நூலகம்
மதுரை மாவட்டம் புது நத்தம் பகுதியில் ரூ.215 கோடி செலவில் மிகப்பிரம்மாண்டமாக கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. 2.61 ஏக்கரில் 2 லட்சத்து 13 ஆயிரத்து 338 சதுரடி பரப்பளவில் இந்த நூலகம் கட்டப்பட்டுள்ளது. மேலும் 18 கோடி ரூபாய் செலவில் புத்தகம் வைக்கும் அலமாரிகள், நாற்காலிகள், மேஜைகள் உள்ளிட்டவை வாங்கப்பட்டுள்ளது, ரூ.5 கோடி செலவில் கணினிகள் வாங்கி வைக்கப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து ரூ.60 கோடி செலவில் பல்வேறு துறைகளைச்சார்ந்த 2.5 லட்சப்புத்தகங்கள் இந்நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளது என்பது மிகப்பெரும் சிறப்பாகும். இத்தகைய சிறப்புமிக்க 8 தளங்கள் கொண்ட உலகத்தரம் வாய்ந்த இந்நூலகத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜூலை 15ம் தேதி மதுரைக்கு சென்று திறந்து வைத்தார். தற்போது மக்கள் பயன்பாட்டில் செயல்பட்டு வருகிறது.
தமிழகத்தில் உலக புத்தக கண்காட்சி 2023
சென்னையில் கடந்த ஜனவரி மாதம் 6ம் தேதி,2023ல் துவங்கிய 46வது உலக புத்தக கண்காட்சி ஜனவரி 22ம் தேதி வரை நடந்தது. சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடந்த இந்த பிரம்மாண்டமான புத்தக கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். தென்னிந்திய புத்தக விற்பனையாளர் சங்கமும், பதிப்பாளர் சங்கமும் இணைந்து சுமார் 1000 அரங்குகள் கொண்ட இந்த புத்தக கண்காட்சியினை நடத்தினர். முதன்முறையாக இந்தாண்டிற்கான புத்தக கண்காட்சியில் திருநங்கைகளுக்கென தனியே ஓர் விற்பனையகம் ஒதுக்கப்பட்டது இதன் கூடுதல் சிறப்பாக பார்க்கப்பட்டது. காலை 11 மணிக்கு துவங்கி இரவு 9 மணி வரை நடந்த இந்த கண்காட்சிக்கு மாணவர்கள், பிரபல எழுத்தாளர்கள், ஆசிரியர்கள் என பல தரப்பினரும் வருகை தந்தனர்.
ஈரோடு தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலயம்
2023-24கான தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் ஈரோடு மாவட்டத்தில் தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலயம் அமைக்கப்படும் என்னும் அறிவிப்பு வெளியானது. ஏற்கனவே அங்கு வெள்ளோடு பறவைகள் சரணாலயம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இந்நிலையில் கோபிசெட்டிபாளையம் அந்தியூரில் 80.567 ஹெக்டர் பரப்பளவில் தமிழகத்தின் 18வது வனவிலங்கு சரணாலயமாக இந்த சரணாலயம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் அதிகளவு வனப்பகுதியினை கொண்ட மாவட்டமாகும். இங்கு குளங்கள், குட்டைகள் போன்ற நீர்நிலைகள் அதிகம் காணப்படுவதால் இது சரியான பகுதியாக கருதப்படுகிறது. அம்மாவட்டத்தின் எந்தெந்த பகுதிகளை இணைத்து சரணாலயம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பணிகளை வனத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து முடிவுகளை எடுப்பார்கள் என்று கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பல்லாவரத்தில் தொழில்நுட்ப பூங்காவை திறந்து வைத்த முதல்வர்
தமிழகத்தில் 5,000 தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையிலான சர்வதேச தொழில்நுட்ப பூங்காவை சிங்கப்பூரை சேர்ந்த கேப்பிட்டாலண்ட் குழுமம் அமைத்துள்ளது. சென்னை பல்லாவரம் ரேடியல் சாலையில் அமைந்துள்ள இந்த பூங்காவை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த அக்டோபர் மாதம் 31ம் தேதி திறந்து வைத்தார். அந்நிகழ்ச்சியில் பேசிய முதல்வர், 'தமிழகத்தில் புதிய தொழில் புரட்சி ஏற்பட்டுள்ளது. முதலீடுகளை ஈர்க்க தமிழகத்தில் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. உலகளவில் பல்வேறு நாட்டு நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளை தமிழகத்தில் செய்ய ஈர்க்கும் வண்ணம் அரசு அதற்கான நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொண்டுள்ளது' என்று பெருமிதம் கொண்டு பேசினார்.
சென்னையை அடுத்து கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம்
சென்னையில் 54கி.மீ.,தூரத்திற்கு இருமார்க்கங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், கோவை மற்றும் மதுரை மாவட்டங்களிலும் மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் கோவை அவிநாசி சாலை மற்றும் சத்தி சாலைகளை உள்ளடக்கிய பகுதிகளில் 9,000கோடி மதிப்பில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்போவதாக அறிவிப்பு வெளியான நிலையில், இதற்கான பணிகள் அடுத்த 5 ஆண்டுகளில் செய்து முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மதுரையில் ஒத்தக்கடையையும், திருமங்கலத்தையும் இணைக்கும் வகையில் 31 கி.மீ., தொலைவிற்கு மெட்ரோ அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான சாத்தியக்கூறுகள் ஆய்வுச்செய்யப்பட்டு அதற்கான அறிக்கை தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், இந்த பணிக்காக ரூ.8,500கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.