அண்ணாமலை வீட்டின் முன்பு அனுமதியின்றி வைக்கப்பட்ட கொடி கம்பம் அகற்றம்
சென்னை பனையூரில் உள்ள தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் வீட்டின் முன்பு அனுமதியின்றி வைக்கப்பட்ட கொடிக்கம்பம் காவல்துறையினரால் அகற்றப்பட்டது. நேற்று மாலை அண்ணாமலை வீட்டின் முன்பு, 50 அடி உயரக் பாஜக கொடிக்கம்பம் புதிதாக நிறுவப்பட்டு கொடியேற்று விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த கொடிக்கம்பம் அமைக்க நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட துறைகளிடமிருந்து அனுமதி வாங்கப்படவில்லை எனக் கூறி அப்பகுதி இஸ்லாமிய அமைப்பினரும், மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பாஜகவினருக்கும், இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் பொதுமக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இஸ்லாமியர்கள் பாஜகவினர் இருக்கும் பகுதிக்கு வராமல் இருக்க, காவல்துறையினர் தடுப்புகள் அமைத்த போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
போராடிய பாஜகவினரை கைது செய்த காவல்துறையினர்
இப்பிரச்சினை தீவிரமாக அடைவதை தடுக்க 200க்கும் மேற்பட்ட காவல்துறையினர் சம்பவ இடத்தில் குறிக்கப்பட்டனர். மேலும் தாம்பரம் காவல் ஆணையாளர் அமல்ராஜ் சம்பவ இடத்திற்கு வந்தார். அனுமதியின்றி வைக்கப்பட்ட கொடிக்கம்பத்தை அகற்ற ஜேசிபி இயந்திரம் வரவழைக்கப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த பாஜகவினர் சிலர் அந்த ஜேசிபி இயந்திரத்தின் கண்ணாடியை உடைத்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் மற்றும் மாநிலத் துணைத் தலைவர் கரு நாகராஜனிடம், காவல் ஆணையர் அமல்ராஜ் நடத்திய பேச்சுவார்த்தை பலன் அளிக்காததால் காவல்துறையினர் பாஜகவினரை குண்டுகட்டாக கைது செய்தனர். அப்போது, சாலையில் அமர்ந்து நகர மறுத்த பாஜக உறுப்பினரை காவல்துறையினர் குண்டுகட்டாக தூக்கிச் சென்றபோது தலையில் அடிபட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் ஜேசிபி இயந்திரம் மூலம் பாஜக கொடிக்கம்பம் அகற்றப்பட்டு காவல்துறையினரால் எடுத்துச் செல்லப்பட்டது.
தமிழக அரசு எதிர்க்கட்சிகளை பழி வாங்குகிறது- பாஜக மாநிலத் துணைத் தலைவர் குற்றச்சாட்டு
தமிழ்நாடு அரசு இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகளை பழிவாங்குவதாக, தமிழ்நாடு பாஜகவின் மாநில துணைத்தலைவர் கரு நாகராஜன் குற்றம் சாட்டியுள்ளார். சம்பவ இடத்தில் செய்தியாளர்களிடம் பேசியவர், "கம்பம் மட்டுமே ஊன்றப்பட்டுள்ள நிலையில் ஆட்சேபம் வருவதாக கூறி நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் 300க்கும் மேற்பட்ட காவல்துறையினர் இங்கு வந்துள்ளனர்". "ராஜீவ் காந்தி சிலை அருகே காங்கிரஸ் கொடிக்கம்பம் வைக்கவே கூடாது. அது பொது இடம். அது குறித்து எவ்வளவு புகார்கள் அளித்தாலும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை" என்ன குற்றம் சாட்டியவர், "ஆனால் கொடிக்கம்பம் மட்டுமே நடப்பட்டுள்ள நிலையில் 300 போலீசார் இங்கு குவிந்துள்ளனர். இது அராஜகம்." "இந்த அராஜகத்தையும், தமிழக அரசின் எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் நடவடிக்கைக்கு எதிராகவும் விரைவில் போராட்டம் நடத்தப்படும்" என தெரிவித்தார்
திமுக அதிகார திமிரில் அராஜகம் செய்கிறது- பாஜக தலைவர் அண்ணாமலை
கொடிக்கம்பம் அகற்றப்பட்டது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள பாஜக தலைவர் அண்ணாமலை, திமுக அதிகார திமிரில் அராஜகம் செய்வதாக குற்றம் சாட்டியுள்ளார். "தீவிரவாதிகள் விடுதலை செய்ய விரும்பும் திமுக அரசு, காரில் வெடிகுண்டுடன் சுற்றுத்திரையும் அளவுக்கு உளவுத்துறையில் கோட்டை விட்ட திமுக அரசு, கொடிக்கம்பத்தை அகற்ற தீவிரவாதிகளை பிடிப்பது போல் படையோடு வந்துள்ளது" என விமர்சித்தார். தமிழக அரசின் இந்த போக்குக்கு எதிராக நவம்பர் மாதம் 1 ஆம் தேதி தொடங்கி 100 நாட்களுக்கு தினமும் 100 கொடிக்கம்பங்கள் நடப்படும் என அந்த அறிக்கையில் அவர் தெரிவித்தார். மேலும் பிப்ரவரி 8 ஆம் தேதி நூறாவது கொடிக்கம்பம் போராட்டத்தில் காயம் அடைந்த விவின் பாஸ்கரன் முன்னிலையில், தற்போது அகற்றப்பட்ட இடத்திலேயே நடப்படும் என தெரிவித்தார்