விருதுநகர்: ரூ.3.5 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்ட ஆண் குழந்தை
விருதுநகர் மாவட்டத்தில் பிறந்து ஒருவாரமே ஆன பச்சிள ஆண் குழந்தை ரூ.3.5 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. விருதுநகர், ராஜபாளையம் அருகேயுள்ள ஜீவா நகர் பகுதியினை சேர்ந்தவர் முனீஸ்வரன், அவரது மனைவி முத்துசுடலி(36). இவர்களுக்கு ஏற்கனவே 6 வயதில் ஓர் மகன் இருந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து தனித்தனியே வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள ஓர் இளைஞருடன் முத்துசுடலிக்கு கள்ளக்காதல் ஏற்பட்டு அவர் கர்ப்பம் தரித்துள்ளார். கடந்த 18ம் தேதி அவருக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது.
முன்னதாக குழந்தையை கொலை செய்ய முடிவு ?
ஏற்கனவே தனக்கு இருக்கும் குழந்தையை வளர்க்கவே சிரமப்பட்டு வந்த முத்துசுடலி, தகாத உறவில் பிறந்த இக்குழந்தையை வளர்க்க பொருளாதார ரீதியாக முடியாது என்பதாலும், கள்ள உறவில் பிறந்த குழந்தை என்பதால் பிரச்சனை ஏற்படும் என்றும் எண்ணி அக்குழந்தையை யாருக்கும் தெரியாமல் கொலை செய்ய முடிவு செய்துள்ளார். பின்னர், அந்த எண்ணத்தை கைவிட்டு, குழந்தையை விற்பனை செய்துவிடலாம் என்று திட்டமிட்டுள்ளார்.
குழந்தைகள் நல பாதுகாப்பு மைய அதிகாரி முத்துசுடலியிடம் விசாரணை
இதுகுறித்து அவர், முகவூரை சேர்ந்த ராஜேஸ்வரி(54)என்பவரிடம் கூறி ஆலோசனை கேட்டதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் ராஜேஸ்வரியின் நண்பரான தென்காசி பகுதியினை சேர்ந்த ஜெயபால் என்பவரது ஆலோசனைப்படி, ஈரோடு மாணிக்கபாளையத்தை சேர்ந்த தம்பிராஜ் என்பவரது மனைவி அசினாவிடம் இந்த ஆண் குழந்தையை ரூ.3.5 லட்சத்திற்கு விற்றுள்ளனர். இதற்கு ஈரோட்டினை சேர்ந்த ரேவதி என்பவரும் உடந்தையாக இருந்துள்ளார். இதனையடுத்து குழந்தை விற்பனை செய்யப்பட்ட விவகாரம் குறித்து குழந்தைகள் பாதுகாப்பு மையத்திற்கு ரகசிய தகவல் கிடைக்கப்பெற்றதை தொடர்ந்து, குழந்தைகள் நல பாதுகாப்பு மைய அதிகாரி திருப்பதி முத்துசுடலியிடம் விசாரணை மேற்கொண்டுள்ளார்.
காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டதன் பேரில் வழங்குப்பதிவு
அப்போது முத்துசுடலி முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார். அதன் காரணமாக சேத்தூர் காவல்துறையில் குழந்தைகள் நல மையம் அளித்த புகாரின் பேரில் முத்துசுடலியை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்துள்ளனர். அப்போது குழந்தை விற்கப்பட்டது உறுதியானது. அதனை தொடர்ந்து அசினாவிடமிருந்து குழந்தை மீட்கப்பட்டு குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அசினாவிடம் போலீஸ் நடத்திய விசாரணையில், அவருக்கு திருமணம் ஆகி ஏற்கனவே 4 குழந்தைகள் உள்ளது. தனது தோழி ரேவதி உடன் இணைந்து குழந்தைகளை வாங்கி விற்பனை செய்வதை தொழிலாக வைத்திருந்தது தெரியவந்துள்ளது.
4 பெண்களை கைது செய்துள்ள காவல்துறை தப்பியோடிய நபரை தேடி வருகிறது
மேலும் இந்த ரேவதி மற்றும் அசினா உள்ளிட்ட இருவர் மீதும் பல்வேறு குழந்தை கடத்தல் வழக்குகள் உள்ள நிலையில் இவர்கள் ஜாமீனில் வெளியில் வந்துள்ளனர் என்பதும் தெரிய வந்துள்ளது. இந்த வழக்கில் தற்போது குழந்தையின் தாய் முத்துசுடலி, ரேவதி, அசினா ,மற்றும் ராஜேஸ்வரி உள்ளிட்ட 4 பெண்களை கைது செய்துள்ள காவல்துறை, தப்பியோடிய ஜெயபாலை தேடி வருகின்றனர்.