தவெகவில் ஓரங்கட்டப்படுகிறாரா நாஞ்சில் சம்பத்? பரபரப்பை ஏற்படுத்திய பதிவு
செய்தி முன்னோட்டம்
தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) முக்கிய பொறுப்பில் இருக்கும் பிரபல அரசியல் பேச்சாளர் நாஞ்சில் சம்பத்தின் திடீர் சமூக வலைதளப் பதிவு, தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் கிளப்பியுள்ளது. "போனால் போகட்டும் போடா" எனத் தொடங்கும் வகையில் அவர் வெளியிட்டுள்ள வேதனை கலந்த வரிகள், கட்சித் தலைமையுடன் அவருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதோ என்ற சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
போனால் போகட்டும் போடா..
— Nanjil Sampath (@NanjilPSampath) October 4, 2026
இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா..
என்னுடைய பகலை யவரும் இருட்டாக்க முடியாது..
என்னுடைய வெளிச்சத்தை யாரும் அணைக்க முடியாது..
என்னுடைய காற்றை யாரும் வழிமறிக்க முடியாது..
இடைத்தேர்தல்
இடைத்தேர்தல் பிரச்சார வாய்ப்பு மறுக்கப்பட்டதா?
தற்போது தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தவெக தலைவர் விஜய் நேரடியாக களமிறங்கி தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
தவெகவின் பரப்புரை செயலாளராக பணியாற்றி வரும் நாஞ்சில் சம்பத்திற்கு, இந்த இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்கத் தவெக தலைமை சார்பில் அழைப்பு விடுக்கப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர்ந்து கட்சிக்காக தொலைக்காட்சி விவாதங்களில் தீவிரமாக பங்கேற்று பதிலளித்து வந்த அவருக்கு, தேர்தல் பிரச்சாரத்தில் வாய்ப்பு மறுக்கப்பட்டது கட்சிக்குள்ளேயே கேள்விகளை எழுப்பியுள்ளது.
வைரல் பதிவு
"போனால் போகட்டும் போடா": பதிவில் இருந்தது என்ன?
தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள நாஞ்சில் சம்பத், "போனால் போகட்டும் போடா.. இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா.. என்னுடைய பகலை யாரும் இருட்டாக்க முடியாது.. என்னுடைய வெளிச்சத்தை யாரும் அணைக்க முடியாது.. என்னுடைய காற்றை யாரும் வழிமறிக்க முடியாது.." எனத் தனது ஆதங்கத்தையும் அதிருப்தியையும் வெளிப்படுத்தியுள்ளார்.
இடைத்தேர்தல் பிரச்சார பட்டியலில் தனது பெயர் இடம்பெறாததால் ஏற்பட்ட மனவருத்தத்தின் வெளிப்பாடே இந்தப் பதிவு என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அரசியல் பயணம்
தவெகவில் நாஞ்சில் சம்பத்தின் அரசியல் பயணம்
கடந்த 2025-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடிகர் விஜய்யை சந்தித்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த நாஞ்சில் சம்பத்திற்கு, உடனடியாக கட்சியின் பரப்புரைச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.
2026 சட்டமன்றத் தேர்தலின் போது தவெக வேட்பாளர்களை ஆதரித்துத் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், சமகால அரசியல் விவாதங்களிலும் கட்சியின் நிலைப்பாட்டைத் தொடர்ந்து ஆதரித்துப் பேசி வந்தார்.
தற்போது இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் அவர் ஓரங்கட்டப்படுவதாக கூறப்படும் சூழலில், கட்சித் தலைமைக்கு எதிராகத் தான் இந்தப் பதிவை இட்டதாக அவர் வெளிப்படையாக அறிவிக்கவில்லை.
இருப்பினும், தவெக உட்கட்சிக்குள்ளே என்ன நடக்கிறது என்பதைத் துல்லியமாக அறிய அவரது அடுத்தகட்ட நகர்வை அரசியல் வட்டாரம் உற்றுநோக்கி வருகிறது.