உயர்கல்வியில் இஸ்லாமியர்களின் சேர்க்கை 2021ல் 8.5%க்கு மேல் குறைந்துள்ளது: அறிக்கை
"இந்தியாவில் முஸ்லிம் கல்வியின் நிலை" என்ற ஆய்வின்படி, உயர்கல்வியில் சேரும் இஸ்லாமிய மாணவர்கள்(18-23 வயதினர்கள்) எண்ணிக்கை கடந்த 2021 ஆம் ஆண்டு, 8.5% க்கு மேல் குறைந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. தேசிய கல்வித் திட்டமிடல் மற்றும் நிர்வாக நிறுவனத்தின் முன்னாள் பேராசிரியர், அருண் சி. மேத்தா இந்த அறிக்கையை எழுதியுள்ளார். கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் அமைப்பு பிளஸ் (UDISE+) மற்றும் உயர் கல்விக்கான அகில இந்திய ஆய்வு (AISHE), ஆகியவற்றில் கிடைத்த தரவுகளை அடிப்படையில், இந்த ஆய்வறிக்கை தொகுக்கப்பட்டுள்ளது. அதன்படி, 21 லட்சம் இஸ்லாமிய மாணவர்கள் 2019-20 ஆம் ஆண்டில் உயர்கல்வியில் சேர்ந்த நிலையில், அந்த எண்ணிக்கை 19.21 லட்சமாக 2020-21 ஆம் ஆண்டில் சரிந்தது.
இந்தியா முழுவதும் பரவலாக சரிந்த இஸ்லாமிய மாணவர்களின் சேர்க்கை
கடந்த 2016-17 ஆம் ஆண்டில், 17,39,218 இஸ்லாமிய மாணவர்கள் உயர்கல்வியில் சேர்ந்திருந்த நிலையில், இந்த எண்ணிக்கை 2019-20 ஆம் ஆண்டில், 21,00,860 ஆக உயர்ந்தது. பின்னர் இது அடுத்த கல்வி ஆண்டில், 19,21,713 ஆக சரிந்தது என அந்த அறிக்கை தெரிவிக்கிறது. இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், இந்த எண்ணிக்கை பரவலாக சரிந்துள்ளது. மேலும் இஸ்லாமிய மாணவர்களின் பிரதிநிதித்துவம் 6 ஆம் வகுப்பு முதல் குறைகிறது என்றும், 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் மிகவும் குறைவாக உள்ளது என தி ஹிந்து கூறுகிறது.
நாட்டிலேயே அதிகபட்ச இடைநிற்றலை பதிவு செய்த அசாம்
இந்திய அளவில் உயர் தொடக்க நிலவைக் கல்வியில் சேரும் 6.67 கோடி மாணவர்களில், 14.42% இஸ்லாமியர் மாணவர்களாக உள்ளனர். இந்த எண்ணிக்கை, 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளில், 12.62% ஆக சரியும் நிலையில், 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் 10.76% ஆக சரிவதாக, அந்த ஆய்வு அறிக்கை கண்டறிந்துள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக அசாம் (29.52%) மற்றும் மேற்கு வங்கம் (23.22%) உயர் கல்வி இடைநிற்றல் விகிதங்களை பதிவு செய்துள்ள நிலையில், குறைந்தபட்சமாக ஜம்மு காஷ்மீரில்(5.1%) மற்றும் கேரளாவில் (11.91%) பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த அறிக்கை, பீகார், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில், பெரும்பான்மையான இஸ்லாமிய மாணவர்கள் பள்ளிகளில் சேர்வதில்லை என்பதை சுட்டிக்காட்டி உள்ளது.