பங்களாதேஷ் எம்.பி கொலை; தோலுரிக்கப்பட்ட உடல், துண்டுதுண்டாக வெட்டப்பட்ட சதை என திடுக்கிடும் தகவல்கள் வெளியானது
பங்களாதேஷ் எம்பி அன்வருல் அன்வர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்குரிய ஒருவரை சிஐடி குழு வெள்ளிக்கிழமை கைது செய்ததையடுத்து பல கொடூரமான விவரங்கள் வெளிவந்தன. இது குறித்து இந்தியா டுடே வெளியிட்ட செய்தியின்படி, படுகொலை பங்களாதேஷ் எம்பி அன்வருல் அசிம் அன்வரின் உடல், தோலுரிக்கப்பட்டு, எலும்புகள் துண்டுகளாக உடைக்கப்பட்டு, அதன் பின்னர் அவரது பிணம் தூக்கி எறியப்பட்டுள்ளது என மேற்கு வங்க குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரான ஜிஹாத் ஹவ்லதார், ஒரு கசாப்பு கடைக்காரர். அவர் வங்காளதேசத்தின் குல்னா மாவட்டத்தில் உள்ள பாரக்பூரில் வசிப்பவர் என்றும், சட்டவிரோதமாக மும்பையில் தங்கியிருந்ததாகவும் சிஐடி வட்டாரங்கள் தெரிவித்தன.
நண்பரே கொலை செய்ய திட்டம் தீட்டினாரா?
ஹவ்லதார், அன்வருல் அன்வரின் நண்பரான அமெரிக்க குடியுரிமை பெற்ற அக்தருஸ்ஸாமான் என்பவரால் இந்த கொலை பணியில் ஈடுபடுத்தப்பட்டார் எனவும் கூறப்படுகிறது. அவருடைய வாடகை வீட்டில் வைத்து தான் கொலை சம்பவம் நடந்தேறியுள்ளது. கொல்கத்தா விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ஹோட்டலில் தங்கியிருந்த ஹவ்லதாருக்கு, வங்கதேச எம்.பி.யைக் கொல்ல அக்தருஸ்மான் பணம் கொடுத்துள்ளார் எனவும், இந்த கொலைக்காக கிட்டத்தட்ட 5 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் விசாரணையில், அக்தருஸ்ஸாமானின் உத்தரவின் பேரில் இந்த கொலை நடந்ததாகவும், கொல்கத்தாவின் நியூ டவுன் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், தானும் மற்ற நான்கு வங்கதேச பிரஜைகளும் சேர்ந்து எம்.பி.யை அடித்துக் கொன்றதாக ஹவ்லதார் ஒப்புக்கொண்டார்.
அப்புறப்படுத்தப்பட்ட தடயங்கள்
கொலை செய்த பின்னர், அன்வாரின் அடையாளத்தை அழிக்க கொலையாளிகள் முழு உடலையும் தோலுரித்து, சதையை நறுக்கியதாக சிஐடி வட்டாரங்கள் தெரிவித்தன. பின்னர் எலும்புகள் துண்டுகளாக உடைக்கப்பட்டு பல பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டன. கொலையாளிகள் கொல்கத்தாவின் பல்வேறு பகுதிகளுக்கு பல்வேறு போக்குவரத்து முறைகளைப் பயன்படுத்தி பாக்கெட்டுகளை தூக்கி எரித்துள்ளனர். அன்வருல் அன்வர், மருத்துவ சிகிச்சைக்காக மே 12ம் தேதி கொல்கத்தா வந்ததாக கூறப்படுகிறது. அவர் முதலில் வடக்கு கொல்கத்தாவில் வசிக்கும் தனது குடும்ப நண்பரான கோபால் பிஸ்வாஸின் வீட்டில் தங்கியிருந்தார். அடுத்த நாள், மே 13 அன்று, அன்வருல் அன்வர் பிஸ்வாஸின் வீட்டில் இருந்து மருத்துவரைப் பார்க்கச் சென்றார். இருப்பினும், மே 17ம் தேதியில் இருந்து அவர் காணவில்லை என்பதால், பிஸ்வாஸ் காவல்துறையில் புகாரளித்துள்ளார்.