தமிழகம் முழுவதும் தயார் நிலையிலுள்ள 540 பேர் கொண்ட 18 பேரிடர் மீட்பு குழு
பருவமழை துவங்கி தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே மழை பெய்து வந்த நிலையில், அந்தமான் கடற்பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சியானது தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக உருமாறியுள்ளது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் முதல் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை எதிர்கொள்ள 18 பேரிடர் மாநில மீட்பு குழுவினர் அதிநவீன உயர்ரக மீட்பு கருவிகளோடு தமிழகம் முழுவதும் தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் தமிழக காவல்துறை சார்பில் பொதுமக்கள் நலனுக்காக 24 மணிநேரமும் செயல்படும் வண்ணம் அவசர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
ஆவடியில் இருந்து அவசர தேவைக்காக கடலூர் விரைந்த பேரிடர் மீட்பு குழு
ஒவ்வொரு மீட்புக்குழுவிற்கும் 30 பேர் என்னும் வீதம் 540 பேர் இந்த குழுவில் அமைக்கப்பட்டுள்ளனர். அதன்படி திருச்சி மாவட்டத்தில் மட்டும் 3 குழுக்கள் தயார் நிலையில் உள்ளது. தேவைக்கேற்ப திருவாரூர், நாகப்பட்டிணம், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இக்குழுவினர் அனுப்பப்படுவார்கள் என்றும் தெரிகிறது. இதனிடையே ஆவடியில் இருந்து அவசர தேவைக்காக 3 மீட்பு குழுக்கள் கடலூர் பகுதிக்கு சென்றுள்ளனர். கடந்த செப்டம்பர் மாதம் 14ம் தேதி தமிழ்நாடு மாநில முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அவரது அறிவித்த உத்தரவின்பேரில், குறிப்பிட்ட சில மாவட்டங்களுக்கு முன்னதாக மீட்பு குழுவினர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.