நாளை உருவாகிறது புதிய காற்றழுத்ததாழ்வுப் பகுதி: டிச.1 வரை தமிழகத்தில் மழை நீடிக்கும்
வங்க கடலில், நாளை, புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது என்றும், அதனால், தமிழகத்தில் வரும் டிசம்பர் 1-ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,"தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதையொட்டியுள்ள தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது வரும் 29-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்". "கிழக்கு திசைக்காற்றில் வேக மாறுபாடு நிலவுவதால், தமிழகத்தில் சில இடங்களிலும், புதுச்சேரி மாநிலத்திலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய, மிதமான மழை பெய்யக்கூடும். நாளை முதல் டிசம்பர் 1-ஆம் தேதிவரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமழை பெய்யக்கூடும்".