மேகதாது அணை பிரச்சனையை தீர்க்க தமிழக அரசை நாடுவோம்: கர்நாடக துணை முதல்வர்
மேகதாது அணை பிரச்சனைக்கு தீர்வு காண தமிழக அரசை நாடுவோம் என்று கார்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். மேகதாது அணை தொடர்பான பிரச்சனை பல நாட்களாக நடந்து வருகிறது. கர்நாடகாவில் பாஜக ஆட்சியில் இருந்த போது மேகதாது அணை கட்ட வேண்டும் என்று கோரி நடைபயணம் செய்த டி.கே.சிவகுமார், 2023 தேர்தல் பிரச்சாரத்தின் போது, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ரூ.9000 கோடி செலவில் மேகதாது அணை கட்டப்படும் என்று வாக்குறுதி அளித்தார். அதேபோல், 2023 கரநாட்க சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸுக்கு பெரும் வெற்றி கிடைத்தது. டி.கே.சிவகுமார், துணை முதல்வராகவும், நீர்வளத்துறை அமைச்சராகவும் பதவியேற்றார். அவரது முதல் நீர்வளத்துறை கூட்டத்தின் போது, மேகதாது அணை கட்ட நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
தமிழ்நாட்டு சகோதரர்கள் மீது கோபமோ வெறுப்போ இல்லை: டி.கே.சிவகுமார்
ஆனால், இதற்கு தமிழகத்தில் பெரும் எதிர்ப்புகள் கிளம்பின. தமிழக அமைச்சர்கள் துரைமுருகன், ரகுபதி ஆகியோர் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இது குறித்து ட்விட்டரில் பதிவிட்ட டி.கே.சிவகுமார், "தமிழக அரசிடம் இது குறித்து முறையிடுவேன். அண்டை மாநிலங்களை சகோதர சகோதரிகளாக வாழ விடுங்கள். ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து ஒன்றுபடுவோம். கர்நாடகாவில் வாழும் தமிழர்களும், தமிழகத்தில் வாழும் கன்னடர்களும் காவிரி நீரை குடித்து வருகின்றனர். மேகதாது திட்டத்தின் மூலம் இரு மாநிலங்களும் பயனடையும். காவேரி படுகையால் விவசாயிகளுக்கு பாசனமும், சாமானியர்களுக்கு குடிநீரும் கிடைக்கும். தமிழ்நாட்டு சகோதரர்கள் மீது கோபமோ வெறுப்போ இல்லை. அவர்கள் நம் சகோதர சகோதரிகளைப் போன்றவர்கள்." என்று கூறியுள்ளார்.