நிறைவடைந்தது மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு: பொதுத்தேர்தலை விட சரிந்த வாக்கு சதவீதம்
செய்தி முன்னோட்டம்
தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த செங்கல்பட்டு மாவட்டத்தின் மதுராந்தகம் (தனி) மற்றும் திருப்பூர் மாவட்டத்தின் தாராபுரம் (தனி) ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று அமைதியான முறையில் நடைபெற்று முடிந்தது. காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்த நிலையில், மதுராந்தகம் தொகுதியில் மாலை 5 மணி நிலவரப்படி 83.86 சதவீத வாக்குகளும், தாராபுரம் தொகுதியில் 78.53 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன. இது கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு சதவீதத்துடன் ஒப்பிடும்போது இரு தொகுதிகளிலுமே குறைவாகப் பதிவாகியுள்ளதாகத் தேர்தல் ஆணையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வாக்குப்பதிவு
மணிவாரியாக பதிவான வாக்கு நிலவரம்
காலை 6 மணிக்கே வாக்குச்சாவடி மையங்களில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டு, 7 மணிக்கு பொதுமக்கள் வாக்களிக்கத் தொடங்கினர்.
காலை 9 மணி நிலவரப்படி மதுராந்தகத்தில் 15.99 சதவீதமும், தாராபுரத்தில் 17.55 சதவீதமும் வாக்குகள் பதிவாகின.
தொடர்ந்து காலை 11 மணியளவில் மதுராந்தகத்தில் 35.55 சதவீதமும், தாராபுரத்தில் 37.28 சதவீதமும் பதிவானது.
மதியம் 1 மணிக்கு மதுராந்தகத்தில் 55.18 சதவீதமாகவும், தாராபுரத்தில் 56.09 சதவீதமாகவும் அதிகரித்தது.
பிற்பகல் 3 மணி நிலவரப்படி மதுராந்தகத்தில் 70.31 சதவீதமும், தாராபுரத்தில் 68.08 சதவீதமும் வாக்குகள் பதிவாகியிருந்தன.
குறைந்த வாக்கு சதவீதம்
கடந்த தேர்தலை விட குறைந்த வாக்கு சதவீதம்
மாலை 5 மணி நிலவரப்படி மதுராந்தகம் தொகுதியில் 83.86 சதவீத வாக்குகள் பதிவாகின.
கடந்த பொதுத்தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி இங்கு 87.84 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், தற்போது 3.98 சதவீதம் சரிந்துள்ளது.
அதேபோல், தாராபுரம் தொகுதியில் மாலை 5 மணி நிலவரப்படி 78.53 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகின.
கடந்த பொதுத்தேர்தலில் இங்கு 86.74 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், தற்போது 8.21 சதவீதம் வாக்குப்பதிவு குறைந்துள்ளது.
மாலை 6 மணிக்கு வரிசையில் நின்றிருந்த வாக்காளர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு வாக்கு செலுத்த அனுமதிக்கப்பட்டது.
தேர்தல் களம்
களத்தில் பலப்பரீட்சை நடத்தும் முக்கிய கட்சிகள்
அதிமுக எம்.எல்.ஏ-க்களான மரகதம் குமரவேல் மற்றும் சத்யபாமா பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்ததால் மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் களம் உருவானது.
மதுராந்தகத்தில் தவெகவின் மரகதம் குமரவேல், திமுகவின் பரந்தாமன், அதிமுகவின் கணிதா சம்பத் உள்ளிட்ட 27 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
தாராபுரத்தில் தவெகவின் சத்யபாமா, திமுகவின் சுகன்யா, அதிமுகவின் பானுமதி உள்ளிட்டோர் களத்தில் உள்ளனர்.
பல முனைப் போட்டி இருந்தாலும் தவெக, திமுக மற்றும் அதிமுக இடையே கடும் மும்முனைப் போட்டி நிலவுகிறது. பதிவான வாக்குகள் அனைத்தும் வரும் அக்டோபர் 9-ஆம் தேதி வெள்ளிக்கிழமை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.