மதுரை தனிஷ்க் நகைக்கடையில் திருடப்பட்ட 11.384 கிலோ தங்க நகைகளும் முழுமையாக மீட்பு: குற்றவாளி சிக்கியது எப்படி?
செய்தி முன்னோட்டம்
மதுரையில் உள்ள பிரபல தனிஷ்க் நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட 11.384 கிலோ தங்க நகைகளும் முழுமையாக மீட்கப்பட்டுள்ளதாக மதுரை மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். மீட்கப்பட்ட நகைகளை நேரில் பார்வையிட்ட பிறகு அவர் செய்தியாளர்களிடம் இந்த வழக்கின் திடுக்கிடும் பின்னணியை விவரித்தார். கொள்ளைச் சம்பவம் நடந்ததும் 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரப் புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டதில், முக்கியக் குற்றவாளியான நிஷாந்த், யூடியூபர் மீனாட்சி மற்றும் சுரேஷ் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விளக்கம்
குற்றவாளிகள் சிக்கியது எப்படி?
கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட நிஷாந்த், தனது கையில் வரைந்திருந்த டாட்டூ மூலமாகவே காவல்துறையினரால் அடையாளம் காணப்பட்டார்.
நிஷாந்தின் தொலைபேசி உரையாடல்களை ஆய்வு செய்ததன் அடிப்படையில் யூடியூபர் மீனாட்சி கைது செய்யப்பட்டார்.
கொள்ளையடித்த பிறகு மதுரையை விட்டு வெளியே செல்லாமல் இருந்த நிஷாந்த், மீனாட்சி வீட்டிற்கு போலீசார் சென்றவுடனேயே மதுரையிலிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
கைது செய்யப்பட்ட மீனாட்சி கூறிய இடங்களில் இருந்துதான் திருடப்பட்ட 11.384 கிலோ தங்க நகைகளும் முழுமையாக மீட்கப்பட்டுள்ளன; மீனாட்சியின் கையிலிருந்து நேரடியாக எந்த நகையும் மீட்கப்படவில்லை என ஆணையர் தெளிவுபடுத்தினார்.
அடுத்தகட்ட விசாரணை
"கடன் தொல்லையே காரணம்"
முக்கியக் குற்றவாளியான நிஷாந்திற்கு ஏற்பட்டிருந்த கடுமையான கடன் தொல்லையே தனிஷ்க் நகைக்கடையில் கொள்ளையடிக்க காரணமாக இருந்துள்ளது.
நிஷாந்திற்குத் தனிஷ்க் நகைக்கடை ஊழியர்களில் யாராவது உதவினார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. மூவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தால்தான் முழு உண்மையும் தெரியவரும்.
தனிஷ்க் நகைக்கடையின் பின்புறம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய ஆணையர், நகைக்கடை நிர்வாகங்கள் கடையை சுற்றிலும் கண்டிப்பாக சிசிடிவி கேமராக்களைப் பொருத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.