பெரும் ரயில் விபத்தினை தவிர்த்த மதுரை ரயில்வே ஊழியருக்கு தேசிய விருது அறிவிப்பு
ஒவ்வொரு ஆண்டும் ரயில்வே துறையில் சிறப்பாக பணியாற்றும் ரயில்வே ஊழியர்களுக்கு தேசிய அளவிலான 'அதிவிசிஸ்ட் ரயில் சேவா புரஸ்கார்' விருது வழங்கப்படுவது வழக்கம். அதன்படி இந்தாண்டிற்கான விருதுக்கு இந்தியா முழுவதும் பணியாற்றி வரும் 100 ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தேர்வு செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இதனுள் தெற்கு ரயில்வே அளவிலான 3 அதிகாரிகள் மற்றும் 6 ரயில்வே ஊழியர்கள் தேர்வாகியுள்ளனர். இவர்களுள் மதுரை கோட்டம் மானாமதுரை ரயில் நிலையத்தில் ரயில் பாதை பராமரிப்பாளராக பணியற்றி வரும் கே.வீரப்பெருமாள் என்பவர் தேசிய விருது பெறுவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளன. இவர் ரயில் பாதையில் ஏற்பட்டிருந்த விரிசலை கண்டறிந்துள்ளார்.
மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விருதுகளை வழங்குவார்
அந்த வழியே சென்னை-தஞ்சாவூர்-ராமேஸ்வரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் வரும் நேரம் என்பதை அறிந்த அவர் உடனடியாக ரயில் பாதையின் எதிர்புறம் ஓடி சென்று சிவப்பு கொடியினை காண்பித்து ரயிலை நிறுத்தினார். இதனால் நடக்கவிருந்த பெரும் ரயில் விபத்து தவிர்க்கப்பட்டது. நிலைமை அறிந்து துரிதமாக செயல்பட்டு பல உயிர்களை காப்பாற்றிய இவருக்கு பல தரப்புகளில் இருந்து பாராட்டுக்கள் குவிந்தது. அதனை தொடர்ந்து, தற்போது இவரின் இந்த சாமர்த்தியமான செயலை பாராட்டி 'அதிவிசிஸ்ட் ரயில் சேவா புரஸ்கார்' என்னும் தேசிய விருது வழங்க மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நடக்கும் இந்த விருது வழங்கும் விழாவில் விருது பெற தேர்வானவர்களுக்கு மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விருதுகளை வழங்குவார் என்றும் கூறப்பட்டுள்ளது.