Loading...
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: மீனவர்கள் உடனே கரை திரும்ப மீன்வளத்துறை உத்தரவு, தமிழகத்திற்கு பாதிப்பா?
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் மீனவர்கள் கரை திரும்ப மீன்வளத்துறை உத்தரவிட்டுள்ளது.

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: மீனவர்கள் உடனே கரை திரும்ப மீன்வளத்துறை உத்தரவு, தமிழகத்திற்கு பாதிப்பா?

எழுதியவர் Vasuki
Nov 11, 2026
03:16 pm

செய்தி முன்னோட்டம்

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வரும் நவம்பர் 13-ஆம் தேதி புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகி, அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெறக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்த நிலையில், உருவாகவிருக்கும் புதிய புயல் சின்னம் வட தமிழகக் கடற்கரையை நோக்கி நகரவே அதிக வாய்ப்புள்ளதாக வானிலை கணிப்புகள் தெரிவிக்கின்றன. இதனைத் தொடர்ந்து, கடலுக்குச் சென்றுள்ள மீனவர்கள் உடனடியாக கரைக்குத் திரும்புமாறு மீன்வளத்துறை தீவிர கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

மீனவர்களுக்கான வழிகாட்டல்

மீன்பிடி டோக்கன்கள் நிறுத்தம் மற்றும் படகுகள் பாதுகாப்பு

எதிர்பார்க்கப்படும் மோசமான வானிலை மாற்றங்களைக் கருத்தில் கொண்டு, வரும் நவம்பர் 13 முதல் மறு உத்தரவு வரும் வரை எந்தவொரு மீன்பிடிப் படகுகளுக்கும் அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட மாட்டாது என மீன்வளத்துறை தெரிவித்துள்ளது.

கடலில் உள்ள விசைப்படகுகள் அனைத்தும் உடனடியாக மீன்பிடித் துறைமுகங்களுக்குத் திரும்பி, பாதுகாப்பான இடங்களில் நங்கூரமிட்டு நிறுத்தப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.

தினசரி கடலுக்குச் செல்லும் சிறிய நாட்டுப்படகுகள், ஃபைபர் படகுகள் உள்ளிட்ட அனைத்து படகுகளும் நவம்பர் 12-க்குள் கரைக்குத் திரும்பி மீன் இறங்குதளங்களில் பாதுகாப்பாக நிறுத்தப்பட வேண்டும்.

கடலில் காற்றின் வேகம் அதிகரித்து அலைகள் சீற்றத்துடன் காணப்படும் என்பதால், வானிலை மையம் மற்றும் மீன்வளத்துறையின் எச்சரிக்கை வழிகாட்டுதல்களைத் பின்பற்றி மீனவர்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெதர்மேன் கணிப்பு

வட தமிழகத்தை நோக்கி நகரும் புயல் சின்னம்

இது தொடர்பாக டெல்டா வெதர்மேன் என்று அறியப்படும் தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் வெளியிட்டுள்ள தகவலில், "தெற்கு வங்கக்கடலின் மத்தியப் பகுதியில் அடுத்த 24 முதல் 48 மணி நேரத்திற்குள் காற்றழுத்தத் தாழ்வு நிலை முழுமையாக உருப்பெறும்".

"தற்போதைய வானிலை நகர்வுகளின்படி, இந்தப் புயல் சின்னம் வட தமிழகக் கடற்கரைப் பகுதியை மையமாகக் கொண்டு வலுப்பெற்று நகரவே அதிக சாத்தியக்கூறுகள் உள்ளன".

இதன் காரணமாக, வரும் நவம்பர் 15-ஆம் தேதி முதல் வட தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை மிகத் தீவிரமடைந்து கனமழை கொட்டித் தீர்க்கும் வாய்ப்புள்ளது. நவம்பர் 14 முதல் ஆழ்கடலுக்குச் செல்வதை மீனவர்கள் முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT