வங்கக் கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: புயலாக மாறினால் Akvan என பெயர் சூட்டப்படும்
செய்தி முன்னோட்டம்
தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் இன்று புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் நிகோபார் தீவுகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது உருவாகியுள்ள இந்தக் காற்றழுத்த தாழ்வுப் பகுதியின் நகர்வு மற்றும் தீவிரம் குறித்து வானிலை ஆய்வு மையம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அக்வான் புயல்
புயலாக மாற வாய்ப்புள்ளதா? பெயர் என்ன?
இது சனிக்கிழமை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாகவும், ஞாயிற்றுக்கிழமை தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற வாய்ப்புள்ளது.
இது மேலும் வலுப்பெற்று வரும் நவம்பர் 19 முதல் நவம்பர் 25-ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் புயலாக உருவாகும் பட்சத்தில், அதற்கு ஈரான் பரிந்துரைத்துள்ள அக்வான் (Akvan) எனப் பெயரிடப்படும்.
நடப்பு வடகிழக்குப் பருவமழை காலத்தில் வங்கக் கடலில் உருவாகும் 3-வது புயலாக 'அக்வான்' அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
கடல் சீற்றத்துடன் காணப்படுவதுடன் சூறைக்காற்று அதிகமாக இருக்கும் என்பதால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.