Loading...
ஜம்மு-காஷ்மீர் குல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல்: 3 CRPF வீரர்கள் காயம்
ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் மீது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்

ஜம்மு-காஷ்மீர் குல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல்: 3 CRPF வீரர்கள் காயம்

எழுதியவர் Venkatalakshmi V
Nov 11, 2026
03:51 pm

செய்தி முன்னோட்டம்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் மீது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் புதன்கிழமை பிற்பகலில் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலில் மூன்று CRPF வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர் என்று இந்தியா டுடே செய்தி குறிப்பிட்டுள்ளது. புதன்கிழமை பிற்பகல் சுமார் 2:15 மணியளவில், மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத தீவிரவாதிகள், குல்காமில் உள்ள பாதுகாப்புச் சோதனை சாவடியில் பணியில் இருந்த பாதுகாப்புப் படையினர் மீது திடீரென துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடினர். இத்தாக்குதலில் காயமடைந்த CRPF வீரர்களும் உடனடியாக மீட்கப்பட்டு, அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளனர்.

காஷ்மீர்

காஷ்மீரில் குறையும் உள்நாட்டுத் தீவிரவாதிகள் எண்ணிக்கை

இதனிடையே, காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள உள்நாட்டு தீவிரவாதிகளின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்திற்கு குறைந்துவிட்டதாக காஷ்மீர் மண்டல காவல்துறை ஐ.ஜி சுஜித் குமார் அண்மையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், காஷ்மீரில் நடைபெறும் தீவிரவாத செயல்களுக்கும் போதைப்பொருள் கடத்தலுக்கும் இடையே நேரடி தொடர்பு இருப்பதாகவும், போதைப்பொருள் மூலம் கிடைக்கும் பணம் OGW எனப்படும் தலைமறைவு ஆதரவாளர்கள் மூலம் தீவிரவாதத்திற்கு பயன்படுத்தப்படுவதாகவும் அவர் எச்சரித்திருந்தார்.

இத்தகைய சூழலில் குல்காமில் நடத்தப்பட்டுள்ள இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் அப்பகுதியில் தற்காலிக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT