Loading...
ஜம்மு-காஷ்மீரில் கடத்தி கொல்லப்பட்ட 2 சிறப்பு காவலர்களின் உடல்கள் குண்டுகளால் துளைக்கப்பட்ட நிலையில் மீட்பு
மாயமான இரண்டு சிறப்பு காவலர்களின் உடல்கள் வனப்பகுதியில் இருந்து பாதுகாப்புப் படையினரால் மீட்கப்பட்டுள்ளன

ஜம்மு-காஷ்மீரில் கடத்தி கொல்லப்பட்ட 2 சிறப்பு காவலர்களின் உடல்கள் குண்டுகளால் துளைக்கப்பட்ட நிலையில் மீட்பு

எழுதியவர் Venkatalakshmi V
Nov 12, 2026
09:49 am

செய்தி முன்னோட்டம்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கிஷ்டவார் மாவட்டத்தில் உள்ள தேஹர்னா வனப்பகுதியில் புதன்கிழமை பிற்பகலில் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதைத் தொடர்ந்து மாயமான இரண்டு சிறப்பு காவலர்களின் உடல்கள் டச்சன் வனப்பகுதியில் இருந்து பாதுகாப்புப் படையினரால் மீட்கப்பட்டுள்ளன. காவலர்களை கடத்திச் சென்று கொலை செய்த தீவிரவாதிகளை தேடும் பணியில் ராணுவத்தினரும் காவல்துறையினரும் இணைந்து மாபெரும் தேடுதல் வேட்டையை முடுக்கிவிட்டுள்ளனர். கொல்லப்பட்ட காவலர்கள் ரிஷிபால் மற்றும் பாபி சந்த் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

விவரங்கள்

சம்பவம் நடந்தது எப்படி?

காவலர்கள் இருவரும் கியார் டச்சானில் இருந்து அப்பர் ரிட்ஜ் தேஹர்னா பகுதியில் உள்ள பாஸ்னான் நோக்கி பயணம் செய்து கொண்டிருந்தபோதுதான் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சிறப்பு நடவடிக்கை குழுவை சேர்ந்த இவர்கள், பாஸ்னான் பகுதியில் களமிறக்கப்பட்டிருந்த ராணுவத்தின் 17-வது ராஷ்டிரிய ரைபிள்ஸ் அணியினரை மாற்றுவதற்காக சென்றுகொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

புதன்கிழமை பிற்பகல் 3:30 மணியளவில் வனப்பகுதியில் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டது.

அதனுடன் மார்வா பகுதியில் ஏர்டெல் மொபைல் நெட்வொர்க் சேவையும் அதே நேரத்தில் துண்டிக்கப்பட்டுள்ளது.

தேடுதல் வேட்டை

மீட்புப் பணிகளும் தீவிர தேடுதல் வேட்டையும்

துப்பாக்கிச் சூடு மற்றும் காவலர்கள் மாயமான தகவல் கிடைத்ததை அடுத்து, மாலை 7 மணியளவில் காவல் நிலைய அதிகாரியுடன் SOG குழுவினர் உஷார்படுத்தப்பட்டு அப்பகுதிக்கு விரைந்தனர்.

தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் வேட்டையில் டச்சன் வனப்பகுதியில் இரண்டு காவலர்களின் உடல்களும் கண்டெடுக்கப்பட்டன.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் பாதுகாப்புப் படையினர் மீது தீவிரவாதிகள் நடத்தி வரும் தொடர் தாக்குதல்கள் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT