LOADING...
கேரளாவின் முதல் டீப் ஃபேக் டெக்னாலஜி வழக்குப்பதிவு, ஒருவர் கைது - க்ரைம் ஸ்டோரி 
கேரளாவின் முதல் டீப் ஃபேக் டெக்னாலஜி வழக்குப்பதிவு, ஒருவர் கைது - க்ரைம் ஸ்டோரி

கேரளாவின் முதல் டீப் ஃபேக் டெக்னாலஜி வழக்குப்பதிவு, ஒருவர் கைது - க்ரைம் ஸ்டோரி 

எழுதியவர் Nivetha P
Nov 12, 2023
07:26 pm

செய்தி முன்னோட்டம்

இந்த வார Newsbytes.,ன் க்ரைம் ஸ்டோரி: வளர்ந்து வரும் ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ்(AI) என கூறப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், மனிதர்களின் டிஜிட்டல் வாழ்க்கையினை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது. ஆனால் அதேசமய்ம் இந்த டிஜிட்டல் வளர்ச்சிகளை பயன்படுத்தி பல்வேறு மோசடி செயல்களும் அதிகரித்து வருகிறது. அதற்கு உதாரணமான ஓர் செய்தியினை தான் நாம் இப்பொழுது காணவுள்ளோம். கேரளா, கோழிக்கோடு பகுதியில் உள்ளவர் ராதாகிருஷ்ணன், CoalIndia நிறுவனத்தில் பணிபுரிந்த இவர் 12 ஆண்டுகளுக்கு முன்னர் பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். இந்நிலையில் இவரது தொலைபேசி எண்ணிற்கு கடந்த ஜூலை மாதம் 9ம் தேதி புது நம்பரிலிருந்து ஏகப்பட்ட குறுஞ்செய்திகள், ராதாகிருஷ்ணன் தனது நண்பர்களோடு எடுத்துக்கொண்ட குழு புகைப்படங்கள், குடும்ப புகைப்படங்கள் உள்ளிட்டவை வந்துள்ளது.

வீடியோ கால் 

வீடியோ காலில் தனது நண்பர் போல் பேசிய மர்ம நபர் 

இதனையடுத்து அவருக்கு ஓர் வீடியோக்கால் வந்துள்ளது. அதில், அவருடன் ஆந்திராவில் பணியாற்றிய வேணுகுமார் என்னும் நண்பர் முகம் வந்த நிலையில், இவரும் பேசியுள்ளார். அப்போது ராதாகிருஷ்ணனிடம் தனது நண்பர் போலவே பேசிய அந்த மர்மநபர் தான் துபாயில் இருப்பதாக கூறியுள்ளார். மேலும் தனது தங்கை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், தற்போது அறுவை சிகிச்சை செய்ய வேண்டி உள்ளதால் உடனடியாக தான் கூறும் நம்பருக்கு ரூ.40 ஆயிரத்தை அனுப்பும்படி கேட்டுள்ளார். அந்த தொகையை அன்றைய தினம் மாலையே திருப்பி கொடுப்பதாக கூறியதையடுத்து, இவரும் அவர் கூறிய எண்ணுக்கு பணத்தை அனுப்பியுள்ளார். இதனிடையே, மீண்டும் அதே எண்ணில் இருந்து ராதாகிருஷ்ணனுக்கு வீடியோக்கால் செய்த அந்த மர்ம நபர் மேலும் ரூ.35 ஆயிரம் வேண்டுமென்று கேட்டுள்ளார்.

சந்தேகம் 

காவல்துறையிடம் புகார் அளித்த ராதாகிருஷ்ணன் 

இம்முறை ராதாகிருஷ்ணனுக்கு சந்தேகம் வரவே, அவர் தனது நண்பர்களிடம் விசாரித்து தனது ஆந்திரா நண்பரின் மொபைல் எண்ணை கேட்டு வாங்கி அழைத்துள்ளார். வேணுகுமார் என்று கூறப்படும் அந்த நபர் ராதாகிருஷ்ணன் அலைபேசி அழைப்பினை ஏற்று பேசுகையில், 'என்ன திடீரென போன் பண்ணியிருக்க?' என்று கேட்டுள்ளார், 'காலையில் தானே வீடியோ காலில் பேசினோம் என்று இவர் கூற அவர் அதனை அறவே மறுத்துள்ளார். அப்போது தான் ராதாகிருஷ்ணனுக்கு தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்துள்ளது. நண்பரின் முகம் அதே குரல் என்று நம்பி பணத்தை இழந்த ராதாகிருஷ்ணன் உடனடியாக காவல்துறைக்கு இதுகுறித்து புகார் அளித்துள்ளார். அதன்பேரில் விசாரணை மேற்கொண்ட காவல்துறை, பணப்பரிமாற்றம் செய்யப்பட்ட வங்கிக் கணக்கு எண் மும்பையை சேர்ந்தது என்பதை கண்டறிந்துள்ளனர்.

Advertisement

வங்கிக்கணக்கு 

இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட நபரை கைது செய்த காவல்துறை 

குறிப்பிட்ட அந்த வங்கிக் கணக்கு எண் முடக்கப்பட்ட நிலையில், 4 மாத தீவிர தேடலுக்கு பின்னர் இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட ஒருவரை காவல்துறை கைது செய்துள்ளது என்று தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. இதற்கிடையே இதுகுறித்து பேசிய கேரள காவல்துறை அதிகாரிகள், "கேரளாவில் பதிவான முதல் AI Based Deep Face Technology வழக்கு இதுதான். இதில் தொடர்புடைய குஜராத் மாநிலத்தை சேர்ந்த ஷேக் முர்துஷாமியா ஹயாத் பாய்(43) கடந்த 10ம் தேதி கைது செய்யப்பட்டுள்ளார்" என்றும், "முக்கிய குற்றவாளியாக கருதப்படும் அகமதாபாத்தை சேர்ந்த கௌசல் ஷா என்பவரை தேடி வருகிறோம்" என்றும் கூறியுள்ளனர்.

Advertisement

அறிவுறுத்தல் 

பொதுமக்கள் பண பரிமாற்றத்தின் பொழுது கவனமாக செயல்பட காவல்துறை அறிவுறுத்தல் 

மேலும் பேசிய காவல்துறையினர், மேற்கூறிய இருவரும் சேர்ந்து தான் இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு பண மோசடி செய்து வருவதாகவும், இவர்கள் இருவர் மீதும் ஏற்கனவே குஜராத், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பண மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்துள்ளது என்றும் கூறியுள்ளனர். இந்த புது டெக்னாலஜி நமக்கு தெரிந்த முகம் மற்றும் அவர்களது குரல் போலவே வேறொருவரை பேச வைக்க உதவுகிறது. எனவே மக்கள் மிகவும் உஷாராக இருக்க வேண்டும் என்றும், இதுபோன்ற பண பரிமாற்றங்கள் செய்வதற்கு முன்னர் ஒன்றுக்கு இருமுறை சம்மந்தப்பட்ட நபரின் மொபைல் எண்ணை தொடர்புக்கொண்டு உறுதி செய்துகொண்ட பின்னர் பணத்தை அனுப்ப வேண்டும் என்றும் காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Advertisement