கடும் விமர்சனங்கள் எழுந்ததையடுத்து தனியார் வேலை ஒதுக்கீடு மசோதாவை இடைநிறுத்திய கர்நாடகா அரசு
கர்நாடகாவில் இயங்கும் தனியார் துறையில் கன்னட மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதை கட்டாயமாக்கும் மசோதாவை, கர்நாடக அரசு கிடப்பில் போட்டுள்ளது. பெரும் பின்னடைவிற்கும், விமர்சனங்களுக்கும் ஆளான நிலையில் இந்த நடவடிக்கை வந்துள்ளது. தனியார் துறையில், 50 சதவீத நிர்வாகப் பதவிகளுக்கும், 75 சதவீத மேலாண்மை அல்லாத பதவிகளுக்கும் கன்னடர்களை நியமிக்க வேண்டும் என முன்மொழியப்பட்ட மசோதாவை மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்த சில மணிநேரங்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வந்தது குறிப்பிடத்தக்கது.
நாஸ்காம் கருத்துக்கு பின்னர் எடுக்கப்பட்ட முடிவு
முன்னதாக இந்த மசோதாவை வரவேற்ற முதல்வர் சித்தராமையா, அவரது அரசாங்கம் "கன்னட சார்பு" என்றும், கன்னடர்களின் நலனில் அக்கறை காட்டுவதே அவர்களின் முன்னுரிமை என்றும் கூறினார். இருப்பினும், இந்த நடவடிக்கை ஐடி துறையால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இது போன்ற மசோதா பெங்களூரில் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சியைத் தடுக்கும் மற்றும் வேலைகளை பாதிக்கும் என்று புகார் எழுப்பப்பட்டது. குறிப்பாக, நாஸ்காம் ஒரு வெளியீட்டில், "நாஸ்காம் உறுப்பினர்கள் இந்த மசோதாவின் விதிகள் குறித்து தீவிரமாக அக்கறை கொண்டுள்ளனர் மற்றும் மசோதாவை திரும்பப் பெறுமாறு மாநில அரசை வலியுறுத்துகின்றனர். மசோதாவின் விதிகள் இந்த முன்னேற்றத்தை மாற்றவும், நிறுவனங்களை விரட்டவும் மற்றும் ஸ்டார்ட்அப்களை முடக்கவும் அச்சுறுத்துகின்றன" என தெரிவித்திருந்தது.