
ஜம்மு-காஷ்மீரில் கடும் மழை: வைஷ்ணோ தேவி யாத்திரைப் பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவில் 31 பேர் உயிரிழப்பு
செய்தி முன்னோட்டம்
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், கத்ராவில் உள்ள மாதா வைஷ்ணோ தேவி யாத்திரைப் பாதையில் புதன்கிழமை பெய்த கனமழையின் போது ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் குறைந்தது 31 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 23 பேர் காயமடைந்தனர். இடிபாடுகளுக்குள் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என்று அதிகாரிகள் அஞ்சுகின்றனர். ஜம்மு காஷ்மீர் முழுவதும் இடைவிடாத மழையால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. ஜம்முவில், பாலங்கள் இடிந்து விழுந்தது, மின் இணைப்புகள் மற்றும் மொபைல் கோபுரங்கள் கடுமையாக சேதமடைந்தன. நேற்று, செவ்வாய்க்கிழமை காலை 11.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை ஜம்முவில் அதிகபட்ச மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, ஆறு மணி நேரத்திற்குள் 22 செ.மீ. மழை பெய்துள்ளது.
நிலச்சரிவு
யாத்திரை பாதையில் நிலச்சரிவு
முன்னதாக, செவ்வாய்க்கிழமை பிற்பகலில், சன்னதிப் பாதையில் மற்றொரு நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் மேலும் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இதற்கிடையில், தொடர் கனமழையால் மாவட்டம் முழுவதும் திடீர் வெள்ளம் மற்றும் நீர் தேங்கல் ஏற்பட்டதை அடுத்து, செவ்வாய்க்கிழமை வரை 3,500க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டனர். மாவட்ட நிர்வாகம், ஜம்மு-காஷ்மீர் காவல்துறை, தேசிய பேரிடர் மீட்புப் படை, துணைப் பேரிடர் மீட்புப் படை, இந்திய ராணுவம் உதவியுடன் வெளியேற்றம் மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஜம்மு பிரிவில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளும் ஆகஸ்ட் 27 வரை மூட உத்தரவிடப்பட்டது. ஜம்மு காஷ்மீர் பள்ளிக் கல்வி வாரியமும் புதன்கிழமை நடைபெறவிருந்த அனைத்து தேர்வுகளையும் ரத்து செய்தது.