கிஷ்த்வார் 2 சிறப்பு காவல் அதிகாரிகள் உயிரிழப்பு: "ராணுவத்தினர் தவறுதலாக சுட்டனர்" என ஜம்மு-காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் குற்றச்சாட்டு
செய்தி முன்னோட்டம்
ஜம்மு - காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் கடந்த வாரம் இரண்டு சிறப்புக் காவல் அதிகாரிகள் உயிரிழந்த சம்பவம், தற்போது காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே பெரும் அரசியல் சர்ச்சையை கிளப்பியுள்ளது. உயிரிழந்த சிறப்புக் காவல் அதிகாரிகளான பாபி சந்த் (57) மற்றும் ரஷ்பால் குமார் (45) ஆகியோரை பயங்கரவாதிகள் எனத் தவறாக கருதி ராணுவத்தினரே சுட்டுக் கொன்றதாக ஜம்மு - காஷ்மீர் பிரதேச காங்கிரஸ் தலைவர் தாரிக் ஹமீத் கர்ரா பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மறுபுறம், இந்த இரட்டைக் கொலையின் பின்னணியில் பயங்கரவாதிகளே இருப்பதாகக் கூறி வரும் பாஜக எம்.எல்.ஏ-க்கள், கர்ராவின் கருத்துகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்
குற்றச்சாட்டு
காங்கிரஸ் தலைவர் தாரிக் ஹமீத் கர்ராவின் குற்றச்சாட்டு என்ன?
செய்தியாளர்களிடம் பேசிய தாரிக் ஹமீத் கர்ரா, இந்தச் சம்பவம் குறித்துத் தனக்குக் கிடைத்த தகவல்களைப் பகிர்ந்து கொண்டதுடன், முழுமையான விசாரணைக்கும் கோரிக்கை விடுத்துள்ளார்.
"கிஷ்த்வார் மாவட்டத்தில் இரண்டு சோதனைச் சாவடிகளைக் கடந்து சென்ற அந்த இரண்டு காவல் அதிகாரிகளும் திரும்பி வந்து கொண்டிருந்தபோது, அவர்கள் சாதாரண உடையில் இருந்ததால் ராணுவத்தினர் அவர்களை பயங்கரவாதிகள் என நினைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்" என கர்ரா தெரிவித்துள்ளார்.
"நான் எங்களது கிஷ்த்வார் மாவட்டத் தலைவரிடம் பேசினேன். இது விசாரணையைப் பொறுத்தது என்றாலும், அந்த இரண்டு சிறப்புக் காவல் அதிகாரிகளும் துப்பாக்கிகளுடன் வேட்டைக்கு சென்றிருந்தனர் என்பதே எனக்குக் கிடைத்த தகவல்"* என அவர் கூறியுள்ளார்.