'பாரம்பரிய நீராவி சிறப்பு ரயில்களை' மேம்படுத்தத் திட்டமிடும் இந்திய ரயில்வே
சில நாட்களுக்கு முன்பு குஜராத்தில் புதிய 'பாரம்பரிய நீராவி சிறப்பு ரயிலை' தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. பாரம்பரியமான நீராவி ரயிலின் தோற்றத்துடன், நவீன தொழில்நுட்பத்தால் இயங்கக்கூடிய ரயில்களே, இந்திய ரயில்வே அறிமுகப்படுத்தியிருக்கும் பாரம்பரிய நீராவி சிறப்பு ரயில்கள். இந்தியாவின் முக்கியமான சுற்றுலாத் தலங்கள் மற்றும் பாரம்பரியத் தளங்களுக்கு இந்த வகையிலான ரயில்களை இயக்கத் திட்டமிட்டு வருகிறது இந்திய ரயில்வே. எலெக்ட்ரிக் ரயில்களான இவற்றின் முன்பக்கம் நீராவின் இன்ஜின் போன்ற அமைப்பு அமைக்கப்பட்டிருக்கும். மேலும், நீராவின் இன்ஜினை பிரதிபலிக்கும் வகையில் மேற்கூறையிலிருந்து புகை விடும் அமைப்பு மற்றும் நீராவி இன்ஜினின் சத்தத்தை வெளியிடும் வகையிலான அமைப்புகளையும் இந்த பாரம்பரிய நீராவி சிறப்பு ரயில்கள் கொண்டிருக்கும்.
பாரம்பரிய நீராவி சிறப்பு ரயில்களின் மேம்பாடு:
எதிர்கால பயன்பாட்டைக் கருத்தில் கொண்டு இந்த பாரம்பரிய நீராவி சிறப்பு ரயில்களை மேம்படுத்தவும் திட்டமிட்டிருக்கிறது இந்திய ரயில்வே. தற்போது இந்தியாவின் உள்நாட்டு தயாரிப்பான வந்தே பாரத் ரயிலில் இருக்கும் பல்வேறு வசதிகளை இந்தப் பாரம்பரிய நீராவி சிறப்பு ரயில்களிலும் வழங்கத் திட்டமிடப்பட்டிருக்கிறது. அதன் ஒரு பகுதியாக தற்போது அதிகபட்சமாக 75 கிமீ வேகத்தைக் கொண்டிருக்கும் இந்த ரயில்களின் வேகத்தை 110 கிமீ ஆக உயர்த்தத் திட்டமிடப்பட்டிருக்கிறது. மேலும், பாதுகாப்பிற்காக ரயில் முழுவதும் சிசிடிவி கேமராக்கள், அவரச நேரத்தில் லோகோ பைலட்டிடம் தகவல் தெரிவிக்க டாக் பேக் வசதி மற்றும் சிக்னல் பரிமாற்ற விளக்கு உள்ளிட்ட வசதிகளை இந்த சிறப்பு ரயில்களில் வழங்கவிருக்கிறது இந்திய ரயில்வே.