இந்தியா கூட்டணி கட்சிகளின் நாடாளுமன்ற தலைவர்கள் கூட்டம் நாளை கூடுகிறது
இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் நாடாளுமன்ற தலைவர்களின் கூட்டம், நாளை காலை 10 மணிக்கு நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே அறையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்றத் தேர்தலில், மிசோரம் மாநிலத்திற்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறாத நிலையில், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் தோல்வியை தழுவியது. இதில், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது குறிப்பிடத்தக்கது. தெலுங்கானாவில் மட்டும் ஆளும் பாரதிய ராஷ்டிரிய சமிதியை வீழ்த்தி காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கிறது.
இந்தியா கூட்டணிக்கு பின்னடைவான காங்கிரஸின் தேர்தல் தோல்வி
அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்கு 5 மாநில சட்டமன்ற தேர்தல் வெற்றி முன்னோட்டமாக பார்க்கப்படும் நிலையில், மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் தோல்வியை தழுவுவது குறிப்பிடத்தக்கது. "இதே நிலைமை நீடித்தால், நாடாளுமன்ற தேர்தலில் வெல்ல முடியாது" என, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா கூறியுள்ள நிலையில், நாளை நடைபெறும் நாடாளுமன்ற தலைவர்களின் கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது. முன்னதாக, டிசம்பர் 6ஆம் தேதி டெல்லியில் இந்தியா கூட்டணி தலைவர்களின் கூட்டத்திற்கு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதில், பிரதமர் வேட்பாளர் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
நாளை இந்தியா கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கூட்டம் நடைபெறுகிறது
INDIA partners parliamentary leaders meeting tomorrow at 10 am in the LoP chamber in Parliament.— ANI (@ANI) December 3, 2023