குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க, இம்மானுவேல் மக்ரோனை இந்தியா அழைத்திருப்பதாக தகவல்
அடுத்த ஆண்டு ஜனவரி 26ம் தேதி நடைபெறும் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனை இந்தியா அழைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக இந்தியா, அமெரிக்க அதிபர் பைடனுக்கு அழைப்பு விடுத்திருந்ததாக கூறப்பட்ட நிலையில், அவரால் பங்கேற்க இயலாது என கூறியதாக தெரிகிறது. இந்நிலையில் இந்தியா மக்ரோனை விழாவில் பங்கேற்க அழைத்துள்ளது. அவர் அழைப்பை ஏற்கும் பட்சத்தில், இந்திய குடியரசு தின விழாவில் பங்கேற்கும் 5வது பிரெஞ்சு அதிபராவார். இதற்கு முன்னர், முன்னாள் பிரெஞ்சு அதிபர்களான, வலேரி கிஸ்கார்ட் டி எஸ்டேயிங், நிக்கோலஸ் சார்கோசி மற்றும் பிரான்சுவா ஹாலண்டே ஆகியோர் விழாவில் பங்கெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடியை கௌரவித்த பிரான்ஸ்
முன்னதாக இந்தாண்டு ஜூலை மாதத்தில் பிரான்சில் நடந்த பாஸ்டில் தின (பிரெஞ்சு தேசிய தினம்) விழாவில், பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். பிரஞ்சு புரட்சி உருவாக காரணமான பாஸ்டில் சிறை முற்றுகை இடப்பட்ட தினத்தை, அந்நாடு 1789 ஆம் ஆண்டு முதல் தேசிய தினமாக கொண்டாடி வருகிறது. 1802ல் முன்னாள் பிரான்ஸ் ஆட்சியாளரான நெப்போலியன் போனபார்டே தோற்றுவித்த, கிராஸ் ஆஃப் தி லெஜியன் ஆஃப் ஹானர் விருது வழங்கி பிரதமர் மோடி கௌரவிக்கப்பட்டார். இது அந்த நாட்டில், இராணுவ அல்லது குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருது ஆகும்.
2023ஆம் ஆண்டுக்கான இந்திய குடியரசு தின சிறப்பு விருந்தினர்
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவிற்கு இந்தியா, பிற நாடுகளின் தலைவர்களை சிறப்பு விருந்தினர்களாக அழைப்பதை வழக்கமாக கொண்டுள்ளது. அந்த வகையில், கொரோனா பெருந்தொற்றுக்கு முன்பு முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா உள்ளிட்டோர் குடியரசு தின விழாவில் சிறப்பு உறுப்பினர்களாக பங்கேற்றனர். கடந்த, 2021, 2022 ஆகிய ஆண்டுகளில் குடியரசு தினத்திற்கு சிறப்பு விருந்தினர்கள் அழைக்கப்படாத நிலையில், இந்த ஆண்டு எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா எல்-சிசி பங்கேற்றார்.