77வது சுதந்திர தினம், இந்த 75 ஆண்டுகளில் இந்தியா சாதித்தது என்ன?-பசுமைப் புரட்சி
ஒரு மனிதனுக்கு மிகவும் முக்கியமான, அடிப்படையான தேவைகளுள் ஒன்று உணவு. இந்தியாவில் அவ்வப்போது உணவுப் பஞ்சம் ஏற்பட்டு உயிர்கள் பறிபோவது என்பது அப்போது தொடர்கதையாக இருந்தது. 1947-ல் ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டுச் சென்ற போது ஆண்டுக்கு ஆறு மில்லியன் டண்கள் கோதுமையை மட்டுமே உற்பத்தி செய்து வந்தது இந்தியா. அந்த சமயத்தில் நாட்டின் தேவையை ஒப்பிடும் போது இது மிக மிகக் குறைவு. எனவே, இந்தியாவின் உணவுத் தேவைக்கு இறக்குமதிகளையே அப்போது அதிகம் நம்பியிருந்தது இந்தியா. முதலில் இந்தியாவின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்ய, உணவு உற்பத்தியில் தன்னிறைவடைய விவசாயத்தில் அதிகம் கவனம் செலுத்தப்பட்டது.
முதல் ஐந்தாண்டுத் திட்டத்தில் செயல்படுத்தப்பட்ட விவசாயத் திட்டங்கள்:
விவசாயத்திற்கு முக்கியத் தேவை தண்ணீர் பாசனம். எனவே, விவசாயத்தைப் பெருக்க புதிய அணைகள் முதல் ஐந்தாண்டுத் திட்டத்தின் கட்டப்பட்டன. பாக்ரா, ஹிகாஹூட் மற்றும் தாமோதர் வேலி உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய அணைகள், இந்த முதல் ஐந்தாண்டுத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டவையே. முதல் ஐந்தாண்டுத் திட்டத்தின் கீழ் விவசாயத் துறையில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் இந்தியாவின் பசியைப் போக்கவில்லை. பல்வேறு புதிய திட்டங்கள் அமல்படுத்தப்பட்ட பிறகும் கூட 1964-ல் இந்தியாவின் கோதுமை உற்பத்தி 12 மில்லியன் டண்கள் என்ற அளவிற்கு மட்டுமே உயர்ந்தது. தானிய உற்பத்தியைப் பெருக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த இந்தியா, அதற்கான வழிகளைத் தேடத் துவங்கியதன் முடிவு தான் பசுமைப் புரட்சி.
இந்தியாவின் பசுமைப் புரட்சி:
1965-ம் ஆண்டிலிருந்து இந்தியாவில் விவசாயத்துறையில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள் காரணமாக இந்தியாவின் உணவு உற்பத்தி அதிகரிக்கத் தொடங்கியது. 1967 முதல் 1978 வரையிலான காலத்தில் செயல்படுத்தப்பட்ட மாற்றங்களையே இந்திய பசுமைப் புரட்சி என்று அழைக்கின்றனர். புதிய வீரிய ஒட்டு ரக விதைகள் பசுமைப் புரட்சியின் போதே கண்டுபிடிக்கப்பட்டன. புதிய பயிரிடும் முறைகள் பயன்படுத்தப்பட்டன. விவசாயத்துறை மேம்பாடுகளுக்கான அறிவியல் ஆராய்ச்சிகளை இந்திய அரசு அதிகளவில் ஊக்குவித்தது. இந்திய விவசாயத்துறையில் இத்தகைய மாற்றங்கள் ஏற்படக் காரணமாக இருந்தவர் எம்.எஸ்.சுவாமிநாதன். பசுமைப் புரட்சியின் மூலம் இந்தியாவின் பசியைப் போக்கிய அவரை இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.
உணவு உற்பத்தியில் தன்னிறைவடைந்த இந்தியா:
1976-ம் ஆண்டு உணவு உற்பத்தியில் தன்னிறைவடைந்தது இந்தியா. நாட்டு மக்களுக்கு தேவையான கோதுமை மற்றும் அரிசியை சுயமாக உற்பத்தி செய்யும் திறனைப் பெற்றது மட்டுமல்லாமல், பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவிற்கு வளர்ந்தது இந்தியா. இந்தக் காலக்கட்டத்தில் பசுமைப் புரட்சி மட்டுமல்ல, மற்றொரு புரட்சியையும் எதிர்கொண்டது இந்தியா. ஆங்கிலேயர்கள், 1947-ல் இந்தியாவை விட்டுச் சென்ற போது, உணவுக்கு மட்டுமல்ல, பால் பொருட்களுக்கும் பிற நாடுகளையே சார்ந்திருந்தது இந்தியா. இந்தியாவில் பால் பொருட்களின் உற்பத்தியையும் அதிகரிக்க, 1970-ல் தொடங்கியது வெண்மைப் புரட்சி. பால் உற்பத்தி மற்றும் சேமிப்பில் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தத் தொடங்கியது இந்தக் காலக்கட்டத்தில் தான்.
இந்தியாவில் ஏற்பட்ட பிற புரட்சிகள்:
அன்று வெண்மைப் புரட்சி என்ற பெயரில் போடப்பட்ட விதை, இன்று உலகில் பால் உற்பத்தியில் முதலிடத்தில் இருக்கிறது இந்தியா. வெண்மைப் புரட்சிக்கு வித்திட்ட டாக்டர்.வர்கீஸ் குரியன் என்பவரே வெண்மைப் புரட்சியின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். அதேபோல் இந்தியாவில் கடுகு மற்றும் எள் ஆகியவற்றில் இருந்து சமையல் எண்ணெய் தயாரிப்பை அதிகரிக்க 1986-ல் மஞ்சள் புரட்சி தொடங்கியது. இந்தியாவின் கடல்வாழ் உயிரினங்களின் உற்பத்தியை அதிகரிக்க இதே காலக்கட்டத்தில், நீலப் புரட்சியும் தொடங்கியது. இதற்கான விதையை 7-ம் ஐந்தாண்டுத் திட்டத்தில் விதைத்து இந்தியா. தேன் மற்றும் தேன் பொருட்களின் உற்பத்தியைப் பெருக்க 1990-களில் தங்கப் புரட்சியும் தொடங்கி, இன்று தேன் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் முறையே 8வது மற்றும் 9வது இடத்தில் இருக்கிறது இந்தியா.