காவிரி மேலாண்மை உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம்
காவிரி நதி நீரை தமிழகத்திற்கு திறந்து விட கர்நாடகா அரசு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது. காவிரியில் இருந்து தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டிய 103.5 டிஎம்சி நீரில் இதுவரை 38.4 டிஎம்சி நீர் மட்டுமே திறந்துவிடப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. இதனால் மீதமுள்ள 65.1 டிஎம்சி நீரினை திறந்துவிடுமாறு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இது குறித்து காவிரி மேலாண்மை ஆணையம், உச்ச நீதிமன்றம் உள்ளிட்டவைகளில் தமிழகம் முறையிட்டது. இந்நிலையில், தமிழகத்திற்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிட வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் முன்னதாக உத்தரவிட்டது. ஆனால் தங்கள் தேவைக்கு மட்டுமே தண்ணீர் இருப்பதால் திறந்து விட முடியாது என்று கர்நாடக அரசு கூறி வருகிறது.
தமிழக அரசின் கோரிக்கையினை நிராகரித்த உச்சநீதிமன்றம்
மேலும், தமிழகத்திற்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிடுமாறு காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவினை தடை செய்ய வேண்டும் என்று கோரி கர்நாடகா அரசு சார்பில் நேற்று(செப்.,20) உச்சநீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை இன்று(செப்.,21) நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, பி.கே.மிஸ்ரா, பி.ஆர்.கவாய் ஆகியோர் முன்னிலையில் வந்தது. அதன்படி, காவிரி ஆற்றில் இருந்து நீர் திறந்துவிடுமாறு உச்சநீதிமன்றம் மற்றும் ஒழுங்காற்று குழுவின் உத்தரவுகளை அமல்படுத்துமாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். தொடர்ந்து, காவிரி மேலாண்மைக்கு எதிராக கர்நாடகா அரசு தாக்கல் செய்த மனுக்களை விசாரிக்க நீதிபதிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். அதேபோல், வினாடிக்கு 24 ஆயிரம் கனஅடி நீரை திறந்துவிடுமாறு தமிழக அரசு விடுத்த கோரிக்கையையும் நீதிமன்றம் நிராகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.