Page Loader
சென்னை, காஞ்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்
நாளை முதல் ஜூலை 22ம் தேதி வரை தமிழகத்தில் கனமழை பெய்யக்கூடும்

சென்னை, காஞ்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

எழுதியவர் Venkatalakshmi V
Jul 18, 2025
08:37 am

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நாளை முதல் ஜூலை 22ம் தேதி வரை கனமழை மற்றும் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் (Orange Alert) அறிவிக்கப்பட்டுள்ளது. வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் வெப்பநிலை சில இடங்களில் 3 டிகிரி செல்சியஸ் வரை குறைந்ததுடன், சில இடங்களில் 2 டிகிரிவரை அதிகரித்துள்ளது. பல பகுதிகளில் இயல்பைவிட 2 முதல் 5 டிகிரிவரை அதிகமான வெப்பநிலை பதிவாகியுள்ளது. மதுரை விமான நிலையத்தில் அதிகபட்சமாக 105 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை (சுமார் 40.5°C) பதிவாகியுள்ளது.

மழை

தமிழகத்தின் உள்மாவட்டங்களில் மழை

தென்னிந்தியாவின் மேல் வளிமண்டலத்தில் உருவான மேலடுக்கு சுழற்சி மற்றும் மேற்கு திசையிலிருந்து வீசும் காற்றின் வேகமாறுபாடு காரணமாக நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மலைப்பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. அதேபோல் தேனி, திண்டுக்கல், திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களிலும் மழை பதிவாகியுள்ளது. எதிர்வரும் நாட்களில் நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இந்த நிலை ஜூலை 22ம் தேதி வரை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இன்று வெப்பநிலை இயல்பாகவே இருக்கும் என்றும், நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.