H-1 B விசா, வர்த்தகம்: டொனால்ட் டிரம்ப் ஜனாதிபதியாவதால் இந்தியாவுக்கு என்ன தாக்கம்?
டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகைக்குத் திரும்புவது உறுதியாகிவிட்ட நிலையில், இந்தியா-அமெரிக்க உறவில் அது ஏற்படுத்தும் தாக்கம் குறித்து இப்போது பலரது பார்வைகள் உள்ளன. வெள்ளை மாளிகைக்கு அதிபராக டிரம்ப் வரும்போது அவரது நிலைப்பாட்டை மிகத் தெளிவாகக் கூறியிருப்பதை மறந்துவிடக் கூடாது- அதாவது, "அமெரிக்காவை மீண்டும் பெரியதாக மாற்றுங்கள்!" மற்றும் "அமெரிக்கா முதலில்" என்பது தான் அது.
டிரம்பின் வெற்றிக்கு மோடி வாழ்த்து
இந்தியா மற்றும் அமெரிக்காவின் உறவுகளின் எதிர்காலம் குறித்த கேள்விகளுக்கு மத்தியில், அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக தனது "நண்பர்" ட்ரம்பை வாழ்த்தினார் பிரதமர் மோடி. "இந்தியா-அமெரிக்கா விரிவான உலகளாவிய மற்றும் மூலோபாய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த நமது ஒத்துழைப்பைப் புதுப்பிப்பதற்கு" எதிர்பார்ப்பதாகக் கூறிய பிரதமர் மோடி, "ஒன்று சேர்ந்து, நமது மக்களின் முன்னேற்றத்திற்காகவும், உலக அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழுமைக்காகவும் ஒன்றாகச் செயல்படுவோம்" என்றும் மோடி தனது வாழ்த்து செய்தியில் கூறினார். 2019 இல் டெக்சாஸில் "ஹவுடி, மோடி!" போன்ற பிரமாண்ட நிகழ்வுகளின் போது ட்ரம்ப் மற்றும் பிரதமர் மோடியின் நட்புறவு பலமுறை முழுமையாக வெளிப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதேபோல 2020இல் அகமதாபாத்தில் "நமஸ்தே டிரம்ப்" நிகழ்வும் அவர்களுடைய உறவை வெளிப்படுத்துகிறது.
இந்தியாவுடனும், பிரதமர் மோடியுடனும் அபிமானத்தை வெளிப்படுத்திய டிரம்ப்
கடந்த வாரம் தீபாவளியன்று இந்து வாக்காளர்களை அணுகிய டிரம்ப், இந்தியாவுடனான அமெரிக்காவின் உறவை வலுப்படுத்துவதற்கான தனது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. மைக்ரோ பிளாக்கிங் தளமான X-இல் ஒரு நீண்ட பதிவில் , இந்தியா மற்றும் பிரதமர் மோடி மீது ட்ரம்ப் தனது அபிமானத்தை வெளிப்படுத்தினார். "தீவிர இடதுசாரிகளின் மத எதிர்ப்பு நிகழ்ச்சி நிரலுக்கு எதிராக இந்து அமெரிக்கர்களையும் பாதுகாப்போம். உங்கள் சுதந்திரத்திற்காக நாங்கள் போராடுவோம். எனது நிர்வாகத்தின் கீழ் இந்தியாவுடனும் எனது நல்ல நண்பருமான பிரதமர் மோடியுடனான எங்கள் சிறந்த கூட்டாண்மையையும் வலுப்படுத்துவோம்" என்று டிரம்ப் அப்போது கூறினார்.
வர்த்தகம் மற்றும் பொருளாதார உறவுகள்
வர்த்தகக் கொள்கைகளில் ட்ரம்பின் நிலைப்பாட்டை கருத்தில் கொண்டு, அவர் தலைமையிலான நிர்வாகம் அமெரிக்காவை மையமாகக் கொண்ட கொள்கைகளுக்கு முன்னுரிமை அளித்து, வரிகளைக் குறைக்கவும், ஏற்றுமதிக் கொள்கைகளை மாற்றவும் இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்கும். கடந்த மாதம், டிரம்ப், இந்தியா வெளிநாட்டுப் பொருட்களுக்கு அதிக வரி விதிப்பதாகவும், தேர்தலில் தான் வெற்றி பெற்றால், பரஸ்பர வரியை அறிமுகப்படுத்துவதாகவும் சபதம் செய்திருந்தார். ப்ளூம்பெர்க் எகனாமிக்ஸ், டொனால்ட் டிரம்பின் முன்மொழியப்பட்ட கட்டண உயர்வுகள் இந்தியாவின் பொருளாதாரத்தை அரிதாகவே பாதிக்கக்கூடும் என்று கணித்துள்ளது. டிரம்ப் சீனப் பொருட்களுக்கு 60% மற்றும் பிறவற்றுக்கு 20% வரி விதித்தால், 2028 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.1% குறையும் என்று மதிப்பிடுகிறது.
H-1B விசா கொள்கை
அமெரிக்காவில் உள்ள இந்திய பணியாளர்களுக்கு அல்லது அமெரிக்காவிற்கு செல்ல விரும்புபவர்களுக்கு--H1-B விசா தான் முக்கிய கவலை. அமெரிக்காவின் அடுத்த அதிபராக ட்ரம்ப் வெள்ளை மாளிகைக்கு திரும்பும் நிலையில், ஆண்டுக்கு 85,000 ஹெச்1-பி விசா ஒதுக்கீடுகள் என்னவாகும் என மக்கள் யோசித்து வருகின்றனர். H1-B என்பது புலம்பெயர்ந்தோர் அல்லாத விசா ஆகும். ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை அமெரிக்காவிற்கு அனுப்ப இந்த விசா அனுமதிக்கிறது. கடந்த காலங்களில், டிரம்ப் H-1B விசாவைப் பற்றிய தனது நிலையை வெளிப்படுத்தினார், அவை அமெரிக்க தொழிலாளர்களுக்கு "மிகவும் மோசமானவை" மற்றும் "நியாயமற்றவை" என்று தெரிவித்திருந்தார். தற்போது அவர் H-1B விசாக்களை மாற்றியமைக்க வாய்ப்புகள் உள்ளன.
பாதுகாப்பு ஒத்துழைப்பு நடவடிக்கைகள்
சீனா மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு பற்றிய டொனால்டின் டிரம்ப் நிலைப்பாடுகள் இந்தியாவின் கவலைகளுடன் ஒத்துப்போகக்கூடும். இது இரு நாடுகளுக்கும் இடையே ஆழமான பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான சாத்தியமான பாதையை முன்வைக்கக்கூடும். முன்னதாக டிரம்பின் ஆட்சியின் கீழ், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கை எதிர்கொள்ள அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான கூட்டணியான QUAD-யும் உயர்த்தப்பட்டது. குறிப்பிடத்தக்க வகையில், சீனாவின் செல்வாக்கை எதிர்கொள்வதில் இரு நாடுகளின் நிலைப்பாட்டைக் கருத்தில் கொண்டு, இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான இராணுவப் பயிற்சிகள் மற்றும் ஒத்துழைப்பு தொடர்ந்து நடைபெறும்.