கோவையில் குறைந்த மழை வெள்ளம்: பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல செயல்படும்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. தமிழத்தின் உள்மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. மதுரை, சிவகங்கை, காரைக்குடி உள்ளிட்ட கடந்த இரு தினங்களுக்கு தென்மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது. இந்த சூழலில் கோவையில் நேற்று முன்தினம் இரவு முதல் மழை தொடங்கியது. தொண்டாமுத்தூர் சுற்றுப்பகுதிகளில் இடியுடன், இரண்டு மணி நேரம் கனமழை பெய்தது. மேற்குத் தொடர்ச்சி மலையின் கணுவாய், சின்னத்தடாகம், ஆனைகட்டி, குருடம்பாளையம் பகுதிகளில் தொடர்ந்த மழையால் சங்கனூர் ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கரைகளில் வசிக்கும் மக்கள், வருவாய் துறையினரால் பாதுகாப்பான இடங்களுக்கு அழைக்கப்பட்டனர்.
பள்ளிகள் வழக்கம் போல செயல்படும்
கோவை நகரின் பெரும்பாலான சாலைகளில் வெள்ளம் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சில சாலைகளில் வெள்ளம் இரண்டு அடி உயரம் பெருக்கெடுத்தது. சிவானந்தா காலனி ரயில்வே பாலத்தில், தனியார் பஸ் ஒன்று வெள்ளத்தில் சிக்கியது. ஆனால் பயணிகள் பாதிக்கப்படவில்லை. ராமநாதபுரம் சக்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான இடங்களில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இந்த நிலையில், கோவையில் இன்று பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கோவையின் பல பகுதிகளில் நள்ளிரவு வரை மழை வெளுத்து வாங்கிய நிலையில், காலையில் மழை நின்றுவிட்டதால் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.