தொடர் கனமழை எதிரொலி; பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; இந்த பகுதியில் மட்டும்
தொடர் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டம் குன்னூர் தாலுக்காவில் மாணவர்களின் பாதுகாப்பு கருதி பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (நவம்பர் 4) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை நீலகிரி மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ளார். அவர் தனது அறிவிப்பில் மேலும், அத்தியாவசிய தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறு பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார். நேற்று தொடங்கிய மழையால், அந்த பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்து சாலைகள் தடைபட்டது உள்ளிட்ட குறிப்பிடத்தக்க இடையூறுகளை ஏற்கனவே ஏற்படுத்தியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் குன்னூரில் மட்டும் 10 செ.மீ மழை பதிவாகியுள்ளது. மேலும், ரயில் தண்டவாளத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதால் மேட்டுப்பாளையம் - ஊட்டி இடையே மலை ரயில் சேவை இன்றும், நாளையும் நிறுத்தப்பட்டுள்ளது.
வானிலை தரவுகள்
வானிலை தரவுகளின்படி, நீலகிரியின் குந்தா, அருப்புக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் கணிசமான மழை பெய்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூரில் 3.7 செமீ, தூத்துக்குடியில் 2.1 செமீ என கணிசமாக மழை பெய்துள்ளது. தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், பிரதிபலிக்கும் வகையில் இந்த மழைப்பொழிவு உள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கிடையே, தெற்கு கேரள கடற்கரையில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக அடுத்த 7 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.