திருநெல்வேலியில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளை அகற்ற கேரளாவிற்கு 3 நாள் கெடு
கேரளா - தமிழ்நாடு எல்லையில், திருநெல்வேலி மாவட்டத்தில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளை மீண்டும் கேரளாவுக்கே கொண்டு செல்ல வேண்டும் என, தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இந்த கழிவுகளை கேரளா அரசே 3 நாட்களுக்குள் அகற்ற வேண்டும் என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. கேரளா இருந்து திருநெல்வேலியில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகள் தொடர்பாக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ். உள்ளிட்டவர்கள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தனர். இதை தொடர்ந்து, தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. அதன் தொடர்ச்சியாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவு விவரங்கள்
இந்த விவகாரத்தில், பசுமை தீர்ப்பாயம் இன்று பிறப்பித்த உத்தரவுகளின் முக்கிய விவரங்கள்: திருநெல்வேலியில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளை மீண்டும் கேரளாவுக்கே கொண்டு செல்ல வேண்டும். கேரளா அரசே இந்த கழிவுகளை 3 நாட்களுக்குள் அகற்ற வேண்டும். இதனுடன், கேரளா அரசு, அகற்றப்பட்ட மருத்துவ கழிவுகளை குப்பை மேலாண்மை நிறுவனத்திற்கு ஒப்படைக்க வேண்டும். கேரளா அல்லது திருநெல்வேலியில் அமைந்துள்ள குப்பை மேலாண்மை நிறுவனத்துடன் இந்த மருத்துவ கழிவுகள் ஒப்படைக்கப்படவேண்டும். இந்த உத்தரவை பின்பற்றி, உடனே கேரளா அரசே பொறுப்பேற்று கழிவுகளை அகற்ற வேண்டும் என பசுமை தீர்ப்பாயம் கூறியுள்ளது.