மருத்துவருக்கு கத்திக்குத்து; வேலை நிறுத்தம் அறிவித்த அரசு மருத்துவர்கள் சங்கம், நோயாளிகளின் நிலை என்ன?
சென்னையில் கிண்டி அரசு மருத்துவமனையில் பணியில் ஈடுபட்டிருந்த மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதல் தொடர்பாக இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மருத்துவரை கத்தியால் குத்திய நபர், தன்னுடைய தாய்க்கு சரியான சிகிச்சை வழங்கப்படவில்லை என்ற காரணத்துடன் டாக்டரை தாக்கியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தினை கண்டித்து, அரசு மருத்துவர்கள் சங்கம் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளது. மேலும், உயிர்காக்கும் அவசர சிகிச்சையைத் தவிர வேறு சேவைகள் வழங்கப்படாது எனவும் அறிவித்துள்ளனர். அவர்கள், இந்த தாக்குதலுக்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று மாநில அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்த சம்பவத்தின் பின்னணி என்ன?
விசாரணையில் டாக்டர் பாலாஜி மீது தாக்குதல் நடத்திய நபரின் பெயர் விக்னேஷ். அந்த நபர், பெருங்களத்தூர் பகுதியில் வசிப்பவர் எனவும், அவரின் தாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர் எனவும், அதற்கான சிகிச்சைக்காக கடந்த 6 மாதமாக அவர் மருத்துவமனைக்கு வருவது வாடிக்கை எனவும் கூறப்பட்டுள்ளது. இதுவரை 6-முறை ஹிமோதெரபி சிகிச்சைக்காக அங்கே வந்திருக்கிறார். ஆனால், அந்த சிகிச்சைகளுக்கு திருப்தி இல்லாமல், அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறத்தொடங்கியதாக கூறப்படுகிறது. தனியார் மருத்துவர்கள், அரசு மருத்துவமனையில் சரியான சிகிச்சை வழங்கவில்லை என கூறியதாகவும், அதை நம்பி ஆத்திரப்பட்டு, இன்று காலை டாக்டர் பாலாஜியுடன் 30 நிமிடங்கள் வாக்குவாதத்தில் விக்னேஷ் ஈடுபட்டுள்ளார். அதன் பின்னரே மருத்துவரை கழுத்து, தலை உள்ளிட்ட 7 இடங்களில் கத்தியால் தாக்குதல் நடத்தியதாகக்கூறப்படுகிறது.