'சட்டத்தை முடக்கும் அதிகாரம் ஆளுநருக்கு கிடையாது' - இந்திய தலைமை நீதிபதி
தமிழக அரசு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ரிட் மனுவினை தாக்கல் செய்தது. அதில், 'தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்படும் மசோதாக்கள் மற்றும் அரசின் உத்தரவுகளுக்கு ஆளுநர் உரிய நேரத்தில் ஒப்புதல் அளிக்க வேண்டும்' என்றும், 'ஆளுநர் ஒப்புதல் அளிக்க கால நிர்ணயம் செய்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
தமிழக அரசு சார்பில் வாதம்
இந்த வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணை இன்று(டிச.,1) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், 'சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டு அனுப்பிவைக்கப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காத ஆளுநர் குடியரசு தலைவருக்கு அனுப்பிவைத்துள்ளார்' என்று வாதாடப்பட்டதாக கூறப்படுகிறது.
'மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பியது ஏன்?' என நீதிபதி கேள்வி
அதன் பின்னர் பேசிய தலைமை நீதிபதி, முதல்முறை மசோதா நிறைவேற்றப்பட்டு அனுப்பிவைக்கப்பட்ட உடனே ஆளுநர் அதனை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்திருக்க வேண்டும். ஆனால் அவர் அதனை நிலுவையில் வைத்திருந்து, மீண்டும் ஒரு முறை நிறைவேற்றப்பட்டு அனுப்பி வைத்த மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பியது ஏன்? என்று கேள்வியெழுப்பியுள்ளார். உடனடியாக சட்டப்பேரவைக்கு மசோதாக்களை அனுப்பாமல் வைத்திருந்தது ஆளுநர் தரப்பிலுள்ள குழப்பங்களை வெளிப்படுத்துகிறது என்றும் அவர் குறிப்பிட்டு பேசினார்.
ஆளுநருக்கு ஆதரவான மத்திய அரசு வாதம் ?
இதனிடையே மத்திய அரசு, அரசியல் சாசன அடிப்படையில் மசோதாவை கிடப்பில் வைக்க ஆளுநருக்கு உரிமையுள்ளது என்று கூறியதாக தெரிகிறது. அதற்கு பதிலளிக்கும் வகையில் நீதிபதி, 'சட்டத்தினை முடக்கவோ, செயலிழக்க செய்யவோ ஆளுநருக்கு அதிகாரம் இல்லை' என்று கூறியுள்ளார். அதேபோல் முதல் அமைச்சர் மற்றும் ஆளுநர் இடையே பல பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டியுள்ளது என்று குறிப்பிட்ட நீதிபதி, ஆளுநர் முதல்வருக்கு அழைப்பு விடுத்து இருவரும் அமர்ந்து பேசி தங்கள் பிரச்சனைகளுக்கான தீர்வினை காண வேண்டும் என்றும் கூறியுள்ளார். இந்த வழக்கின் அடுத்த விசாரணை வரும் 11ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.