Loading...
ஜெம் கிரானைட்ஸ் வீரமணி மீதான போக்சோ வழக்கு: விரிவான விசாரணைக்கு முதல்வர் உத்தரவு
நடுநிலையோடு இந்த விசாரணையை முடிக்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது

ஜெம் கிரானைட்ஸ் வீரமணி மீதான போக்சோ வழக்கு: விரிவான விசாரணைக்கு முதல்வர் உத்தரவு

எழுதியவர் Venkatalakshmi V
Sep 21, 2026
02:02 pm

செய்தி முன்னோட்டம்

பிரபல ஜெம் குழுமத்தின் தலைவரும், கிரானைட் தொழிலதிபருமான ஆர்.வீரமணி மீது சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக தொடரப்பட்ட போக்சோ (POCSO) வழக்குத் தொடர்பாக காவல் துறை விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமிகளின் வாக்குமூலங்களின் அடிப்படையில் வழக்கில் பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவுகளும் (SC/ST Act) சேர்க்கப்பட்டுள்ளன. இச்சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள், பின்னணியில் உள்ள பிற பிரமுகர்கள் மற்றும் சான்றுகளை அழிக்க முயன்றவர்கள் என அனைவரையும் கண்டறிந்து குற்றப்பத்திரிகையை விரைந்து தாக்கல் செய்யக் சென்னை காவல் ஆணையர் தனிப்படைக்கு உத்தரவிட்டுள்ளார்.

பின்னணி

வழக்கின் பின்னணி மற்றும் கைது நடவடிக்கை

கடந்த 2025 அக்டோபர் மாதம், சென்னை மத்திய குற்றப்பிரிவின் விபசார தடுப்புப் பிரிவினரிடம் பென்டிரைவ் ஒன்று ஒப்படைக்கப்பட்டது.

அதில் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

விசாரணையில் அக்காட்சிகளில் இருப்பது ஜெம் கிரானைட்ஸ் அதிபர் வீரமணி என்பதும், தேனாம்பேட்டையில் உள்ள வீடு ஒன்றில் இச்சம்பவம் நடந்ததும் கண்டறியப்பட்டது.

இதையடுத்து, சம்பவத்திற்கு உதவியாக இருந்த சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்கன் ஆகியோருடன் சேர்த்து தொழிலதிபர் வீரமணியை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தீவிர விசாரணை

சிறப்பு நீதிமன்ற உத்தரவும் தீவிர விசாரணையும்

முன்னதாக, பாதிக்கப்பட்ட சிறுமியை அடையாளம் காண முடியவில்லை எனக் கூறி வழக்கை முடிக்கக் காவல் துறை முயன்ற நிலையில், சென்னை சிறப்பு போக்சோ நீதிமன்றம் அதனை நிராகரித்து மீண்டும் விரிவாக விசாரிக்க உத்தரவிட்டது.

தற்போது நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், பாதிக்கப்பட்ட சிறுமி அடையாளம் காணப்பட்டு, அவரிடம் இருந்து வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

மேலும், ஏழை குடும்பங்களைச் சேர்ந்த பல சிறுமிகள் இதுபோன்று தவறாகப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் பெண் உதவி ஆய்வாளர்கள் அடங்கிய தனிப்படையினர் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

யாருடைய தலையீடும் இன்றி நடுநிலையோடு இந்த விசாரணையை முடிக்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ADVERTISEMENT