தமிழகத்தின் புதிய அமைச்சரவை: 9 அமைச்சர்களின் பின்னணி
செய்தி முன்னோட்டம்
தமிழக அரசியல் வரலாற்றில் 1967-ஆம் ஆண்டிற்குப் பிறகு, திமுக மற்றும் அதிமுக அல்லாத ஒரு மாற்று சக்தியாகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் சி. ஜோசப் விஜய் இன்று தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த பிரம்மாண்ட விழாவில், ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவருக்குப் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். முதலமைச்சர் விஜய்யுடன் 9 அமைச்சர்களும் பதவியேற்றுள்ளனர். அவர்களது விபரங்கள் பின்வருமாறு:-
விஜய் அமைச்சரவையின் 9 அமைச்சர்கள்
கே.ஏ. செங்கோட்டையன் மற்றும் ஆதவ் அர்ஜுனா
திரு. கே.ஏ. செங்கோட்டையன் (கோபிச்செட்டிபாளையம்): முன்னாள் அதிமுக அமைச்சரான இவர், 9 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த அனுபவம் கொண்டவர். தவெக செயற்குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளராகச் செயல்படும் இவர், விஜய்யின் அமைச்சரவையில் மிக மூத்த அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். திரு. ஆதவ் அர்ஜுனா (வில்லிவாக்கம்): அரசியல் வியூக வகுப்பாளரான இவர், தவெக-வின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளராகப் பணியாற்றியவர். சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் வெற்றி பெற்று அமைச்சராகியுள்ளார்.
முழு விவரம்
புஸ்ஸி ஆனந்த் மற்றும் அருண்ராஜ்
திரு. என். ஆனந்த் - புஸ்ஸி ஆனந்த் (தியாகராய நகர்): தவெக-வின் முதல் பொதுச்செயலாளரான இவர், விஜய்யின் நம்பிக்கைக்குரிய தளபதியாக அறியப்படுபவர். முன்னாள் புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினரான இவர், தற்போது தியாகராய நகர் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். டாக்டர் கே.ஜி. அருண்ராஜ் (திருச்செங்கோடு): முன்னாள் ஐ.ஆர்.எஸ் (IRS) அதிகாரியான இவர், வருமான வரித்துறையில் கூடுதல் ஆணையராகப் பணியாற்றியவர். தவெக-வின் கொள்கை பரப்பு பொதுச்செயலாளரான இவர், படித்த இளைஞர்களின் பிரதிநிதியாக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார்.
முழு விவரம்
ராஜ்மோகன் மற்றும் பி. வெங்கடரமணன்
திரு. ராஜ்மோகன் (எழும்பூர்): திமுக-வின் கோட்டையாகக் கருதப்பட்ட எழும்பூர் தொகுதியில் வெற்றி பெற்றுப் பரவலான கவனத்தைப் பெற்றவர். தற்போது தமிழக அமைச்சரவையில் அமைச்சராகத் தடம் பதித்துள்ளார். திரு. பி. வெங்கடரமணன் (மயிலாப்பூர்): வழக்கறிஞரான இவர், கடந்த 25 ஆண்டுகளாக விஜய்யின் மேலாளராகப் பணியாற்றியவர். கட்சியின் பொருளாளராக இருக்கும் இவர், சென்னை மயிலாப்பூர் தொகுதியிலிருந்து அமைச்சராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
முழு விவரம்
டி.கே. பிரபு ,எஸ். கீர்த்தனா சி.டி.ஆர். மற்றும் நிர்மல் குமார்
டாக்டர் டி.கே. பிரபு (காரைக்குடி): சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த பல் மருத்துவரான இவர், காரைக்குடி தொகுதியிலிருந்து வெற்றி பெற்றுள்ளார். படித்த நிபுணர்களுக்கு அமைச்சரவையில் இடமளிக்க வேண்டும் என்ற விஜய்யின் நோக்கத்திற்கு இவர் ஒரு சிறந்த உதாரணம். செல்வி எஸ். கீர்த்தனா (சிவகாசி): 30 வயது மட்டுமே நிரம்பிய இவர், அமைச்சரவையின் இளைய முகமாகத் திகழ்கிறார். சிவகாசி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை வீழ்த்தி முதன்முறை சட்டமன்ற உறுப்பினராகி, தற்போது அமைச்சராகப் பதவியேற்றுள்ளார். திரு. சி.டி.ஆர். நிர்மல் குமார் (திருப்பரங்குன்றம்): மதுரை திருப்பரங்குன்றம் தொகுதியில் வெற்றி பெற்ற இவர், தகவல் தொழில்நுட்பப் பிரிவில் அனுபவம் மிக்கவர். தென் தமிழகத்தின் முக்கியப் பிரதிநிதியாக அமைச்சரவையில் இடம் பிடித்துள்ளார்.