இளைஞர்களுக்கு ஆண்டுதோறும் முழு உடல் மருத்துவ பரிசோதனை அவசியம் - ககன்தீப் சிங் பேடி
சமீப காலமாக இளைஞர்கள் மத்தியில் சிறுநீரக பாதிப்புகள் அதிகரித்து வருகிறது என்னும் காரணத்தினால் ஆண்டுதோறும் இளைஞர்கள் முழு உடல் மருத்துவ பரிசோதனையினை செய்து கொல்வது அவசியம் என்று தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி வலியுறுத்தியுள்ளார். சென்னையில் நேற்று(நவ.,26) நெப்ரோ பிளஸ், கிட்னி வாரியர் பவுண்டேஷன்ஸ், டேங்கர் பவுண்டேஷன், மோகன் பவுண்டேஷன் உள்ளிட்ட அமைப்புகள் ஒன்றிணைந்து சிறுநீரக நலன் குறித்த மருத்துவ கல்வி நிகழ்ச்சியினை நடத்தியது. இந்த நிகழ்ச்சியினை துவக்கிவைத்த ககன்தீப் சிங் பேடி பேசுகையில், 'அண்மை காலமாக சிறுநீரக பாதிப்புகள் அதிகரித்து காணப்படுகிறது. இதற்கு உரிய நேரத்தில் சிகிச்சை எடுக்காவிடில், உயிருக்கே ஆபத்தாக அமையும்' என்று கூறினார்.
பிரபலமான மருத்துவ நிபுணர்கள் கொண்டு மருத்துவ கலந்தாய்வு
தொடர்ந்து பேசிய அவர், "தற்போதைய காலகட்டத்தில் 24% நபர்களுக்கு உயர்ரத்த அழுத்தமும், 17% பேருக்கு சர்க்கரை நோய் பாதிப்பும் இருக்கிறது" என்று தெரிவித்தார். மேலும், 'இந்த விகிதங்களை வைத்து பார்க்கையில், தமிழக மக்கள் மத்தியில் மூன்றில் ஒரு பங்கு சிறுநீரக பாதிப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. குறிப்பாக இளைஞர்களுக்கு இந்த பாதிப்பு அண்மைக்காலமாக அதிகரித்து காணப்படுகிறது' என்றும் கூறினார். இதனால் இளைஞர்கள் உள்ளிட்ட அனைவருமே ஆண்டுக்கு ஒரு முறையாவது முழு உடலுக்கான மருத்துவப்பரிசோதனையினை செய்து கொள்வது அவசியம் என்று அவர் வலியுறுத்தி பேசியுள்ளார். ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்வது மற்றும் தினந்தோறும் உடற்பயிற்சி உள்ளிட்டவைகளும் அவசியம் என்றும் அவர் அறிவுறுத்தினார். இந்நிகழ்ச்சியில் பிரபலமான மருத்துவ நிபுணர்கள் கொண்டு மருத்துவ கலந்தாய்வு அமர்வுகள் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.