LOADING...
திமுகவின் 'ஆஃபர்' முதல் 'ரிசார்ட்' ரகசியங்கள் வரை: எடப்பாடி பழனிசாமி மீது முன்னாள் அமைச்சர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்!
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் செய்தியாளர்களிடம் பேசினார்

திமுகவின் 'ஆஃபர்' முதல் 'ரிசார்ட்' ரகசியங்கள் வரை: எடப்பாடி பழனிசாமி மீது முன்னாள் அமைச்சர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்!

எழுதியவர் Vasuki
May 13, 2026
05:19 pm

செய்தி முன்னோட்டம்

தமிழக சட்டமன்றத்தில் தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு முடிந்துள்ள நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் செய்தியாளர்களிடம் பேசிய கருத்துக்கள் தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளன. தமிழகச் சட்டமன்றத்தில் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த சி.வி.சண்முகம், தேர்தல் முடிவுகளுக்குப் பின் நடந்த ரகசிய அரசியல் பேரம் மற்றும் அதிமுகவின் உட்கட்சி மோதல்கள் குறித்து அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்தார். குறிப்பாக, விசிக தலைவர் திருமாவளவனை முதலமைச்சராக்கக் கிடைத்த வாய்ப்பை எடப்பாடி பழனிசாமி தனது பதவி ஆசையினால் தடுத்துவிட்டதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். குறிப்பாக திருமாவளவன் மற்றும் திமுக - அதிமுக இடையேயான ரகசியத் தொடர்பு குறித்த அவரது பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கைநழுவிய வரலாற்று வாய்ப்பு

திருமாவளவன் முதல்வர்

தமிழக அரசியலில் இதுவரை யாரும் சிந்திக்காத ஒரு சமூக மாற்றத்திற்கான வாய்ப்பு வந்ததாகக் குறிப்பிட்ட சி.வி. சண்முகம் கூறியதாவது. சமூகத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை முதலமைச்சராக்கலாம் என விசிக தலைவர் திருமாவளவனை திமுக முன்மொழிந்தது. திருமாவளவன் மட்டும் முதலமைச்சராக இருப்பார், மீதமுள்ள 33 அமைச்சர் பதவிகளையும் அதிமுகவே எடுத்துக் கொள்ளலாம் என திமுக தரப்பில் கூறப்பட்டது. ஆனால், "விசிக ஆட்சி என்றுதான் பெயர் வரும்" எனக் கூறி இபிஎஸ் அதனை ஏற்க மறுத்துவிட்டார். "நான்தான் முதல்வர் இல்லையென்றால், நாம் எதிர்க்கட்சியாக இருப்போம்" என்று இபிஎஸ் பிடிவாதமாக இருந்ததால் ஒரு வரலாற்று வாய்ப்பு கைநழுவியது.

ரகசியப் பேச்சுவார்த்தை

திமுகவுடன் கைகோர்க்க முயன்றார் இபிஎஸ்

திமுகவை எதிர்த்து உருவாக்கப்பட்ட அதிமுகவை, அதே திமுகவுடன் இணைந்து ஆட்சி அமைக்க இபிஎஸ் திட்டமிட்டதாகச் சண்முகம் சாடினார். தேர்தல் முடிவுக்கு மறுநாள் காலையில், திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைக்கப் போவதாகவும், அதற்கு டெல்லியில் அனுமதி பெற்றுவிட்டதாகவும் இபிஎஸ் கூறினார். தேர்தல் வெற்றிச் சான்றிதழ் வாங்கிய அன்றே இரண்டு திமுக முன்னாள் அமைச்சர்கள் தன்னிடம் பேசியதாகவும், பின்னர்தான் இபிஎஸ்-ன் ரகசியத் திட்டம் தனக்குப் புரிந்தது என்றும் அவர் தெரிவித்தார். திமுகவை அழிக்க உருவான இயக்கத்தைத் தொண்டர்களின் விருப்பத்திற்கு மாறாக திமுகவுடன் இணைக்க முயன்றதுதான் பெரிய துரோகம் என அவர் ஆவேசப்பட்டார்.

Advertisement

போலிக் கடிதம் 

போலிக் கடிதம் மற்றும் மிரட்டல் குற்றச்சாட்டுகள்

சட்டமன்ற நடைமுறைகள் குறித்து இபிஎஸ் தரப்பு பொய்களைப் பரப்புவதாக அவர் குறிப்பிட்டார். 47 எம்.எல்.ஏ-க்கள் தன்னை ஆதரிப்பதாகச் சபாநாயகரிடம் இபிஎஸ் கொடுத்த கடிதம் முற்றிலும் போலியானது. அந்த 47 பேர் எப்போது, எங்கே கையெழுத்துப் போட்டார்கள் என்பதை இபிஎஸ்ஸால் நிரூபிக்க முடியுமா எனச் சவால் விடுத்தார். சட்டமன்ற உறுப்பினர்களை இபிஎஸ் மிரட்டவும் அச்சுறுத்தவும் பார்க்கிறார்.

Advertisement

கொள்கை முடிவு

தவெக-வுக்கு ஆதரவு ஏன்?

இன்றைய நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசுக்கு ஆதரவளித்ததற்கான காரணத்தையும் அவர் விளக்கினார். "திமுகவை அப்புறப்படுத்த வேண்டும் என்பதே தவெக மற்றும் தங்களது (அதிமுக அதிருப்தி அணி) நோக்கமாகும். திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகவே தவெக-வுக்கு ஆதரவு அளித்தோம்; வேறு எந்த நோக்கமும் இல்லை". "எனது பிள்ளை மீது சத்தியமாகச் சொல்கிறேன், நான் கூறுவது அனைத்தும் உண்மை. இபிஎஸ் தான் செய்த துரோகங்களை மறைக்க எங்களைத் துரோகி என்கிறார்" என உருக்கமாகப் பேசி சி.வி. சண்முகம் தனது உரையை முடித்தார்.

Advertisement