தங்கம், வெள்ளி விலை உயரப்போகிறதா? இறக்குமதி சுங்க வரியை உயர்த்திய மத்திய அரசு
செய்தி முன்னோட்டம்
மத்திய நிதியமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி, தங்கம், வெள்ளி மற்றும் இதர விலைமதிப்பற்ற உலோகங்களின் இறக்குமதி மீதான சுங்க வரி அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. மே 13 நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ள இந்த மாற்றங்கள், நகை வியாபாரிகள் மற்றும் நுகர்வோர் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. வருவாய்த்துறை வெளியிட்டுள்ள அறிவிக்கையின்படி, தங்கம், வெள்ளி, பிளாட்டினம் மற்றும் இதர விலைமதிப்பற்ற உலோகங்களின் இறக்குமதி வரி 10 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, நகைத் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் ஹூக்குகள், கிளாஸ்ப்கள், கிளாம்கள் மற்றும் ஸ்க்ரூ பேக்ஸ் போன்ற உதிரிபாகங்களுக்கும் இந்த வரி உயர்வு பொருந்தும். மறுசுழற்சிக்காக இறக்குமதி செய்யப்படும் உலோகச் சாம்பல் மற்றும் இதர கழிவுகளுக்கும் இனி 10% வரி விதிக்கப்படும்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Import duty on gold and other precious metals has been increased, and the revised rates will come into effect from midnight tonight pic.twitter.com/7iWfOFp6j6
— IANS (@ians_india) May 12, 2026
பிரதமர் மோடி
பிரதமர் மோடியின் முக்கிய வேண்டுகோள்
மேற்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றங்கள் உலகப் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இரு தினங்களுக்கு முன்னர் இந்தியக் குடிமக்களுக்கு சில வேண்டுகோளை விடுத்திருந்தார். அதன்படி, பொருளாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கில் தங்கம் வாங்குவதைக் குறைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். அதோடு, அந்நியச் செலாவணி வெளியேற்றத்தைக் குறைக்க வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்க்குமாறு வலியுறுத்தியுள்ளார். இந்தியாவின் தங்கம் இறக்குமதி கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2025-26 நிதியாண்டில் இந்தியாவின் தங்கம் இறக்குமதி சாதனை அளவாக 71.98 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டின் 58 பில்லியன் டாலரை விட 2% அதிகமாகும். சீனாவின் இடத்திற்கு அடுத்தபடியாக, தங்கம் நுகர்வில் இந்தியா உலகில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
பாதிப்பு
யாருக்கு பாதிப்பு?
இந்த வரி உயர்வால் புல்லியன் வர்த்தகர்கள், நகை உற்பத்தியாளர்கள் மற்றும் சுத்திகரிப்பு நிலையங்கள் கூடுதல் செலவுகளைச் சந்திக்க நேரிடும். இறக்குமதி செலவு அதிகரிப்பதால், உள்நாட்டுச் சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர். மத்திய அரசின் இந்த அதிரடி நடவடிக்கை, அதிகரித்து வரும் இறக்குமதியைக் கட்டுப்படுத்தி நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைப்பதற்கான ஒரு முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.