LOADING...
இன்று சட்டசபையில் பலப்பரீட்சை! நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் விஜய் பெரும்பான்மையை நிரூபிப்பாரா?
இன்று காலை 9.30 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்குகிறது

இன்று சட்டசபையில் பலப்பரீட்சை! நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் விஜய் பெரும்பான்மையை நிரூபிப்பாரா?

எழுதியவர் Venkatalakshmi V
May 13, 2026
07:19 am

செய்தி முன்னோட்டம்

தமிழக அரசியலில் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாளாக இன்று கருதப்படுகிறது. முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக (TVK) அரசு, தனது பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பை இன்று சட்டமன்றத்தில் எதிர்கொள்கிறது. ஆளுநர் அர்லேகர் உத்தரவின்படி, இன்று காலை 9.30 மணிக்கு இந்த வாக்கெடுப்பு தொடங்குகிறது. தமிழக சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்கத் தேவையான மேஜிக் எண் 117 ஆகும். முதலமைச்சர் விஜய்க்கு தவெக-வின் 106 எம்.எல்.ஏ-க்கள் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் 13 எம்.எல்.ஏ-க்கள் என மொத்தம் 119 உறுப்பினர்களின் ஆதரவு உறுதியாக உள்ளது. இது தவிர, அதிமுக-வில் இருந்து பிரிந்துள்ள சி.வி. சண்முகம் தலைமையிலான அணியினரும் விஜய்க்கு ஆதரவு தெரிவித்துள்ளதால், விஜய் அரசுக்கு எந்தவித சிக்கலும் இருக்காது.

செயல்முறை

நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் முறை

சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தலைமையில் நடைபெறும் இந்த வாக்கெடுப்பு பின்வரும் நடைமுறைகளைப் பின்பற்றும்: தீர்மானம்: ஆளும் கட்சி தரப்பில் அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானம் முன்மொழியப்படும். இறுதியில் முதல்வர் விஜய் உரையாற்றுவார். கதவுகள் மூடல்: வாக்கெடுப்பு தொடங்குவதற்கு முன்னதாக அவையின் அனைத்துக் கதவுகளும் மூடப்படும். அதன் பிறகு உள்ளே வருபவர்களோ அல்லது வெளியே செல்பவர்களோ கணக்கில் கொள்ளப்பட மாட்டார்கள். பிரிவு வாரியாக வாக்கெடுப்பு: அவை ஆறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் ஆதரவு மற்றும் எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் தனித்தனியாக எண்ணப்படுவார்கள். சபாநாயகர் அறிவிப்பு: வாக்கெடுப்பில் பங்கேற்றவர்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் ஆதரவு அளித்தால், பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டதாகச் சபாநாயகர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்.

அதிமுக

அதிமுக-வின் இருவேறு நிலைப்பாடுகள்

இன்றைய வாக்கெடுப்பில் அதிமுக-வின் நிலைப்பாடு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஒரு பிரிவினர் அரசுக்கு எதிராக வாக்களிக்கப் போவதாக அறிவித்துள்ளனர். அதே சமயம், சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி தலைமையிலான மற்றொரு பிரிவினர் விஜய்க்கு ஆதரவு அளிப்பதாகத் தெரிவித்துள்ளனர். இந்த உள்மோதல் அவையில் பரபரப்பை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது. தமிழக வரலாற்றில் ஒரு புதிய திருப்பமாக, இன்றைய நம்பிக்கை வாக்கெடுப்பு நிகழ்வுகள் அனைத்தும் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. பனையூர் அலுவலகத்தில் நேற்று தனது எம்.எல்.ஏ-க்களுடன் ஆலோசனையில் ஈடுபட்ட முதல்வர் விஜய், அவையில் அமைதியாகவும் கண்ணியமாகவும் செயல்பட அறிவுறுத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement